அரசியலமைப்பு மாற்றத்திற்காக ஒன்றிணையுமாறு புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு

அரசியலமைப்பு மாற்றத்திற்காக ஒன்றிணையுமாறு புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2020 | 8:20 pm

Colombo (News 1st) தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலைப் புறந்தள்ளி மக்கள் எதிர்பார்க்கும் அரசியலமைப்பு மாற்றத்திற்காக ஒன்றிணையுமாறு புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று ஆரம்பமான செயலமர்வில் உரையாற்றிய போதே பிரதமர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள புதிய உறுப்பினர்களுக்காக இந்த செயலமர்வு நடத்தப்பட்டது.

பாராளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் இதன்போது தௌிவுபடுத்தப்பட்டது.

செயலமர்வில் 81 புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இம்முறை பொதுத் தேர்தலில் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் முதற்தடவையாக தெரிவாகியுள்ளதுடன், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வாய்ப்பை 16 புதிய உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்த செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பிலான மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது வலியுறுத்தினார்.

செயலமர்வு நாளையும் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்