அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீது துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

by Staff Writer 24-08-2020 | 7:19 PM
Colombo (News 1st) அமெரிக்க விஸ்கோன்சின் மாநிலத்தின் கொனோஷாவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரினால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜேகொப் பிளேக், ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். கெனோஷா நகரில் குறித்த நபர் காரொன்றில் ஏற முற்படுகையில் பின்புறமாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகும் காணொளிகள் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்தச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, அவசரகால பின்னிரவு ஊரடங்கு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் பொலிஸ் தலைமையகத்தை நோக்கி பேரணி சென்றதுடன், வாகனங்களையும் தீக்கிரையாக்கியுள்ளனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவான சுலோகங்களையும் எழுப்பியுள்ளனர். நாடளாவிய ஊரடங்கு சட்டத்தையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். ஆயுதம் ஏந்தியவாறு கொள்ளைகள் இடம்பெறலாமென்பதாலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படலாம் என்பதாலும் பொது பாதுகாப்பு கருதி வர்த்தக நிலையங்களை 24 மணித்தியாலங்களுக்கு மூடுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.