வெல்லே சாரங்க உள்ளிட்ட நால்வர் கைது

வெல்லே சாரங்க உள்ளிட்ட நால்வர் கைது

by Staff Writer 23-08-2020 | 2:56 PM
Colombo (News 1st) பாதாள குழு உறுப்பினரான 'வெல்லே சாரங்க' மற்றும் கொழும்பில் கஞ்சாவை விநியோகிக்கும் மூவர், துபாய்க்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லே சாரங்க என அழைக்கப்படும் கமகே சாரங்க பிரதீப் எனும் சந்தேக நபர் நாட்டிற்கு கேரள கஞ்சாவை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஏனைய சந்தேக நபர்கள் மூவரும் பல மில்லயன் பெறுமதியான கஞ்சாவை கொழும்பிற்கு விநியோகித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த 3 சந்தேக நபர்களில் ஒருவரான கதளுவ லியனகே புத்திக சஞ்சீவ எனும் சந்தேக நபர், அங்கொட லொக்காவின் உதவியாளர் எனவும் அவரிடமிருந்து 29 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இதேவேளை, அங்கொட லொக்காவின் உதவியாளரான 'சம்மியா' என அழைக்கப்படும் சமிந்த சந்திமால் எதிரிசூரிய பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினால் சந்கேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லும் சந்தர்ப்பத்தில், குறித்த சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறிக்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபரான 'ச்சம்மியா' உயிரிழந்துள்ளார். 41 வயதான சந்தேகநபரின் சடலம் கம்பஹா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.