நாட்டில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்குமாறு மஞ்சள் செய்கையாளர்கள் கோரிக்கை

by Staff Writer 23-08-2020 | 10:05 PM
Colombo (News 1st) இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் என வர்த்தகர்களும் நுகர்வோரும் கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில், தமக்குரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டால் மஞ்சள் உற்பத்தியை தம்மால் மேலும் விஸ்தரிக்க முடியும் என முல்லைத்தீவு மஞ்சள் செய்கையாளர்கள் கூறுகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய கலாசார விழுமியங்கள் முதல் அன்றாட சமையல் வரை அத்தனை காரியங்களிலும் இடம்பிடித்துள்ள மஞ்சளுக்கு நம்மவர் மத்தியில் தனிச்சிறப்பு உண்டு. கொரோனா தொற்று உலகம் பூராக பரவியதை அடுத்து மஞ்சளின் மகத்துவத்தை உணர்ந்து அதன் பயன்பாடு மக்களிடையே அதிகரிக்க அதற்கான கேள்வியும் அதிகரித்தது. கிருமிநாசினியான மஞ்சளின் பயன்பாடும் விலையும் அதிகரித்ததை அடுத்து, மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதால் மஞ்சள் தட்டுப்பாடும் ஏற்பட்டது. எனினும், எந்தப் பகுதியிலும் செய்கை பண்ணக்கூடிய ஒரு பயிராகவே மஞ்சள் காணப்படுகின்றது. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வேணாவில், கைவேலி உள்ளிட்ட பகுதிகளில் பலரும் மஞ்சள் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். மஞ்சள் செய்கையை ஊக்குவிக்கும் உதவிகள் தமக்கு வழக்கப்பட்டால் தம்மால் இந்த உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். மஞ்சளுக்கான கேள்வி அதிகரித்து இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுத்தமான மஞ்சளில் மா உள்ளிட்ட கலப்படங்களை கலந்து விற்கும் நூதன திருட்டும் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நூதன திருட்டுக்களிலிருந்து நுகர்வோரை பாதுகாக்க உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். மஞ்சள் செடி வளர சாதாரண இடவசதி போதுமானது என்பதுடன் காலநிலை பெரியளவில் தாக்கம் செலுத்தாது என்பதால் எங்கும் அதனை பயிரிடலாம். இதனை உணர்ந்து விவசாயத்துறையும் அதிகாரிகளும் மஞ்சள் உற்பத்தியை அதிகரிக்க கவனம் செலுத்தினால் மஞ்சளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இலங்கை விரைவில் மாற்றமடையும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.