13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்

by Staff Writer 22-08-2020 | 4:58 PM
Colombo (News 1st) 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான இந்தியாவின் நீண்ட கால நிலைப்பாட்டை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இந்த விடயம் குறித்து நேற்று (21) கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர். நேற்று மாலை 5.30 முதல் இரவு 7 மணி வரை இந்த சந்திப்பு நடைபெற்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சமாதானம், நல்லிணக்கம் மற்றும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பில், குறிப்பாக பொதுத் தேர்தலின் பின்னரான தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டமைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என அவர் கூறியதாக கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.