ஹய்னான் தீவில் நிலத்தடி முகாமிற்குள் நுழையும் நீர்மூழ்கிக் கப்பல்

by Staff Writer 22-08-2020 | 8:22 PM
Colombo (News 1st) தென் சீனக் கடலில் ஹய்னான் தீவில் (Hainan Island) நிலத்தடி முகாமிற்குள் நீர்மூழ்கிக் கப்பலொன்று நுழையும் அரிய நிழற்படமொன்று தற்போது சர்வதேச ஊடகங்களில் உலா வருகின்றது. அந்த அரிய காட்சி செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்டுள்ளது. அமெரிக்க பின்புலத்தைக் கொண்ட Planet Labs எனும் நிறுவனம் Radio Free Asia-வின் சமூக வலைத்தளத்தில் முதல் தடவையாக இந்த நிழற்படத்தை வெளியிட்டுள்ளது. 093 ரக அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பலொன்று Yulin கடற்படை முகாமின் நிலத்தடி சுரங்கத்திற்குள் நுழையும் காட்சி இந்த நிழற்படத்தில் தென்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹாங்காங்கிலிருந்து தென்கிழக்கு திசையில் 300 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள ஹய்னான் தீவின் தென் பகுதியில் Yulin முகாம் இருக்கின்றது. சீனாவில் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்காக இருக்கும் பிரதான வசதிகளுடன் இந்த முகாம் உள்ளதென சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.