விக்னேஸ்வரனின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு மனுஷ நாணயக்கார கோரிக்கை

by Bella Dalima 21-08-2020 | 7:24 PM
விக்னேஸ்வரனின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு மனுஷ நாணயக்கார கோரிக்கை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று (20) ஆற்றிய உரை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கவனம் செலுத்தப்பட்டது.
சபாநாயகர் அவர்களே, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் முதற்கண் என் வாழ்த்தைத் தெரிவிக்கின்றேன். எனது தாய் மொழியிலும், உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியிலும் நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்
என சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
சபாநாயகர் அவர்களே, நாம் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்யும்போது, நாட்டில் வேறு இராச்சியத்தை அமைப்பதற்கு, ஒத்துழைப்பு வழங்கவோ, அதற்காக நிதிப் பங்களிப்பு அல்லது வேறு உதவிகளை வழங்கவோ மாட்டோம் என சத்தியப்பிரமாணம் செய்தோம். எனினும், இந்த நாட்டில் யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு, தாயக எண்ணக்கருவை ஓரங்கட்டி இந்த நாட்டில் அனைவரையும் இலங்கையர்களாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு முழு நாடும் வந்துள்ள தருணத்தில், தமிழ் மொழி நாட்டில் முதல் மொழி எனவும், தாயகத்தின் முதல் மொழி என்றும் இந்தப் பாராளுமன்றத்தில் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று கூறினார். அந்தக் கருத்து இந்தப் பாராளுமன்றத்தின் ஹன்சார்ட்டில் உள்வாங்கப்படுவது தவறானது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகள் இருக்க முடியும். இந்தத் தாயகம் யாருடையது, யாரிடமிருந்து ஆரம்பித்தது என்பன குறித்து ஒவ்வொரு நிலைப்பாடுகள் இருக்க முடியும். நிலைப்பாடுகள் இருந்தாலும், இலங்கை பாராளுமன்றத்தின் ஹன்சார்ட்டில் உள்வாங்கப்படுவது தவறானது. ஆகவே, தயவு செய்து அதனை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன்
என கூறினார். இது குறித்து ஆராய்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.