ஆனந்தசங்கரி பிரதமருக்கு கடிதம்

ஆனந்தசங்கரி பிரதமருக்கு கடிதம்

by Staff Writer 21-08-2020 | 6:46 PM
Colombo (News 1st) தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்தசங்கரி பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தமிழ் மக்களின் தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பலவற்றை அவர் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு மாசி மாதம் 4 ஆம் திகதி காலி முகத்திடலில் 59 ஆவது சுதந்திர தின விழாவில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தம்மையும் டக்ளஸ் தேவானந்தாவையும் குறிப்பிட்டு ஆற்றிய உரையின் பகுதியை இந்தக் கடிதத்தின் ஊடாக வீ.ஆனந்தசங்கரி ஞாபகப்படுத்தியுள்ளார். பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதற்கு மிகப்பொருத்தமான ஆயுதம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதே என்றும் அதற்கு தற்போது தென்னிலங்கை சிங்கள மக்கள் தயாராகிவிட்டார்கள் எனவும், நியாயமாகவும் நேர்மையாகவும் குறைந்தபட்சம் ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் இசைந்து செயற்பட வேண்டும் எனவும் அப்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியதனை இந்தக் கடிதத்தில் ஆனந்த சங்கரி நினைவுகூர்ந்துள்ளார். ஐந்து ராஜபக்ஸக்களும் சுயமாக முன்வந்து பிரச்சினையைக் கையில் எடுத்து, தீர்வு காண வேண்டிய தார்மீகக் கடமையைப் புரிந்து, மூதாதையர்களின் நற்பெயரைக் காப்பாற்றி, அவர்களின் ஆத்மா சாந்தியடைய வைப்பார்கள் என நம்புவதாகவும் வீ. ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். தாம் உரிய நேரத்தில் பிரதமரோடு பேச இருக்கின்ற இனப் பிரச்சினைக்குரிய தீர்வு, இந்திய அரசியல் சாசனத்தை ஒத்ததாகும் எனவும் அந்தக் கடிதத்தில் வீ. ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.