9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று

9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று

9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2020 | 7:14 am

Colombo (News 1st) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று (20) நடைபெறவுள்ளது.

9 ஆவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வை எளிமையாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இன்று காலை 9.30 மணிக்கு 9 ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு இடம்பெறுவதுடன் முதற்கட்டமாக சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அனையடுத்து, பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களதும் சத்தியப்பிரமாண பிரகடனம் இடம்பெறவுள்ளது.

இம் முறை பாராளுமன்றத்திற்கு 80 இற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன், 9 ஆவது பாராளுமன்றத்தில் 2 தேசிய பட்டியல் உறுப்பினர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் எங்கள் மக்கள் சக்தியின் சார்பிலும் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் இதுவரை பெயரிடப்படவில்லை.

இதேவேளை, சுதந்திரத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதித்துவமின்றி பாராளுமன்ற கன்னி அமர்வு நடைபெறுவது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும்.

9 ஆவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வயது குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக 26 வயதான ஜீவன் தொண்டமான் இன்று சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.

இதேவேளை, சிறைக்காவலிலுள்ள இருவர் இன்று பாராளுமன்ற கன்னி அமர்வில் பங்கேற்கவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர ஆகியோர் இன்று அமர்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் நடைபெற்றதும் பிற்பகல் 3 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, மீண்டும் பாராளுமன்றம் பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் கூடவுள்ளது.

இதற்கமைய, புதிய பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் கலந்துகொள்ளவுள்ள அதிதிகளை இன்று பிற்பகல் 2 மணியளவில் தமது ஆசனங்களில் அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் மீண்டும் கூடியவுடன் பிரதமர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர்
நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி சபைக்கு அழைத்துச் செல்லப்படுவார்.

அதனையடுத்து ஜனாதிபதியின் தலைமையில் சபை அமர்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் என பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுகளை தொடர்ந்து ஜனாதிபதி, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டதன் பின்னர் பாராளுமன்றம் பிறிதொரு தினத்திற்கு ஒத்தி வைக்கப்படும்.

புதிய பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளதுடன், இராணுவ அணிவகுப்பு, மோட்டார்வாகன பவனி ஆகிய நிகழ்வுகள் இம் முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் காரணமாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியே பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ
அமர்வு இடம்பெறவுள்ளது.

இதனடிப்படையில், 674 ஆசனங்களை கொண்ட கெலரியில் இம் முறை 300 பேருக்கு மாத்திரமே ஆசனங்களை ஒதுக்கியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்