சபாநாயகராக மஹிந்த யாப்பாவும் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவும் நியமனம்

by Bella Dalima 20-08-2020 | 7:42 PM
Colombo (News 1st) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டார். இன்று காலை 9.30-க்கு ஆரம்பமான பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில், மஹிந்த யாப்பா அபேவர்தனவை தினேஷ் குணவர்தன சபாநாயகராக முன்மொழிந்தார். அதனை, ஐக்கிய மக்கள் சக்தியின் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்தார். சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், இன்று சபைக்கு சமூகமளித்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 221 பேரும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். புதிய சபாநாயகருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ முதலில் வாழ்த்துத் தெரிவித்தார். இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய சபாநாயகருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மஹிந்த யாப்பா அபேவர்தன, முப்பது வருடங்களுக்கும் அதிகக் கால அனுபவம் மிக்க அரசியல்வாதியாவார். 1983 ஆம் ஆண்டில் ஹக்மன தொகுதியில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அவர், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாக பாராளுமன்றத்திற்குப் பிரவேசித்தார். 23 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுள்ள அபேவர்தன, கலாசாரம், தேசிய மரபுரிமைகள், விவசாயத்துறை உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். 2002ஆம் ஆண்டில் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற அமைதிக்கான ஆசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், பல சர்வதேச பாராளுமன்ற மாநாடுகளிலும் கலந்துகொண்டுள்ளார். மாகாண சபை தொடர்பில் அனுபவம் மிக்க மஹிந்த யாப்பா அபேவர்தன, 1994-2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென் மாகாண முதலமைச்சராக பதவி வகித்தார். அவர் தென் மாகாண சபையின் அவைத் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். 2020 பொதுத்தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட மஹிந்த யாப்பா அபேவர்தன 80,895 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். இதேவேளை, புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார். 2000 ஆம் ஆண்டில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவான சஜித் பிரேமதாச, 2001ஆம் ஆண்டில் சுகாதார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2015 நல்லாட்சியின் போது வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக பதவி வகித்த சஜித் பிரேமதாச, தமது தந்தையாரின் உதாகம எண்ணக்கருவை மீண்டும் செயற்படுத்தி வீடமைப்பு வேலைத்திட்டம் மூலம் மக்களுக்கு பாரிய சேவையாற்றினார். சசுனட அருண, வெவய் தாகெபய், கமய் பன்சலை போன்ற திட்டங்கள் மூலம் மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை அவர் முன்னெடுத்தார். கலாசார அமைச்சராகவும் சஜித் பிரேமதாச இதற்கு முன்னர் செயற்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அவர், பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியை ஆரம்பித்து அதற்கு தலைமைத்துவம் வழங்கி குறுகிய காலத்திற்குள் பாராளுமன்ற எதிர்க்கட்சி எனும் முக்கிய நிலைக்கு கட்சியை இட்டுச்சென்றுள்ளார். இதேவேளை, பாராளுமன்ற பிரதி சபாநாயகராக கேகாலை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரஞ்சித் மத்தும பண்டார தெரிவானார். அவரை, மஹிந்த அமரவீர மற்றும் நிமல் லன்சா ஆகியோர் முன்மொழிந்தனர். யாழ். மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான அங்கஜன் இராமநாதன் குழுக்களின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார். நிமல் சிறிபால டி சில்வா மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் அங்கஜன் இராமநாதனின் பெயரை முன்மொழிந்து வழிமொழிந்தனர். புதிய சபை முதல்வராக தினேஷ் குணவர்தனவும், ஆளுங்கட்சியின் பிரதம கொரடாவாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.