அரசாங்கத்தின் கொள்கைகளை வௌியிட்டார் ஜனாதிபதி: புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதாக வாக்குறுதி

by Bella Dalima 20-08-2020 | 8:15 PM
Colombo (News 1st) முதலில் 19 ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு அதன் பின்னர் சகலருடனும் ஒன்றிணைந்து நாட்டிற்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் நிகழ்த்திய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். இன்று பிற்பகல் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வரவேற்றார். வழமையாக ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் வழங்கப்படும் 21 மரியாதை வேட்டுக்களை இந்த முறை தீர்க்க வேண்டாம் என ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக எளிமையாக வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து தமது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி ஆரம்பித்தார்,
1978 ஆம் ஆண்டிலிருந்து 19 தடவைகள் எமது நாட்டின் அரசியலமைப்பு திருத்தப்பட்டுள்ளமையினால், அது தொடர்பில் நம்பிக்கையற்ற தன்மை மற்றும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பில் மாற்றம் ஒன்றைக் கொண்டு வருவதாற்காக நாம் கோரிய மக்கள் ஆணை எமக்குக் கிடைத்துள்ளது. எனவே, மக்கள் எமக்கு வழங்கிய அந்த பொறுப்பை நாம் நிறைவேற்ற வேண்டும். அதனடிப்படையில், எமது முதலாவது விடயமாக மக்களுக்கு உறுதி வழங்கியதைப் போன்று 19 ஆவது அரசியலமைப்பைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதன் பின்னர் அனைவரையும் இணைத்துக்கொண்டு நாட்டிற்குப் பொருந்தும் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவோம். இதன் போது இந்த நாட்டின் அனைத்து மக்கள் தொடர்பில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்கு முன்னுரிமை அளிப்போம். பிரிவினைவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் பாராளுமன்றம் நாட்டிற்குப் பொருத்தமில்லை. அவ்வாறு இருக்கும் போது தௌிவான தீர்மானங்களை எடுக்க முடியாது. புதிய அரசியலமைப்பை அறிமுகம் செய்யும் போது தற்போதைய தேர்தல் முறைமையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். விகிதாசார தேர்தல் முறையில் காணப்படும் சிறந்த விடயங்களை பாதுகாத்துக்கொள்வதுடன், பாராளுமன்றத்தின் ஸ்திரத்தன்மையையும் மக்களின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தும் வகையிலும் அந்த மாற்றம் இடம்பெற வேண்டும்
என ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார். தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்தார்.
எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு ஏற்ப எனது பதவிக்காலத்திற்குள் நாட்டின் இறைமையைப் பாதுகாத்து, பௌத்த சாசனத்தை பதுகாப்பேன் என்று நான் உறுதி வழங்குகின்றேன். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்து அதனை உறுதிப்படுத்துவேன். நாட்டில் எந்தவொரு பிரஜைக்கும் தாம் விரும்பும் சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் மிகவும் சிறந்த முறையில் பாதுகாக்கப்படும் என்பது தற்போது மக்களுக்கு தௌிவாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் இந்த அரசாங்கத்தை நாம் பொறுப்பேற்கும் போது நாட்டின் பதாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் இருந்த நம்பிக்கை வீழ்ச்சியடைந்திருந்தது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் முன்னுரிமை அளித்து மக்கள் மத்தியில் இருந்த சந்தேகத்தை நீக்கி, நாட்டின் பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்த செயற்பட்டோம். மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பாக இருந்த பாதாள உலக செயற்பாடுகள், போதைப்பொருள் போன்ற சமூக பிரச்சினைகளில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் செயற்றிட்டங்களை ஆரம்பித்து மக்கள் மத்தியில் அந்த நம்பிக்கையை நாம் வென்றெடுத்துள்ளோம். இதன் காரணமாக பாரிய மக்கள் ஆணை எமக்கு கிடைத்தது. மக்கள் எதற்காக எமக்கு வாக்களித்தார்கள் என்பது தற்போது புலப்படுகின்றது. எனவே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த எதிர்பார்ப்புகள் சீர்குலையும் வகையில் நாம் செயற்படப்போவதில்லை. மக்களுக்கு சேவையாற்றுவதே மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படை பொறுப்பு என்பதனை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்​.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் படி உள்நாட்டுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களையும் ஜனாதிபதி தௌிவுபடுத்தினார்.
  • இலவச சுகாதார சேவையை வழங்கும் போது காணப்படுகின்ற பிரச்சினைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
  • ஆயுர்வேத மற்றும் உள்நாட்டு வைத்தியத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
  • மருந்து இறக்குமதியின் போது இடம்பெறும் மோசடிகளைத் தடுப்பதற்கான செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்படும்
  • உள்நாட்டு மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்
  • விவசாயத்தை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படும்
  • உரிய காலத்தில் நீர் மற்றும் உரம் விநியோகிக்கப்படும்
  • நாடு பூராகவுமுள்ள குளங்களை புனரமைத்து நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்
  • வேலையற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் வகுக்கப்படும்
  • எந்தவொரு அமைச்சிற்கும் அல்லது நிறுவனத்திற்கும் தேவையற்ற விதத்தில் ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள்
  • சுயதொழில் அபிவிருத்தி மற்றும் தொழில் முயற்சியாண்மையாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • தொழிலில் இணைத்துக்கொள்வதற்கு பதிலாக தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் வகுக்கப்படும்
என ஜனாதிபதி கூறினார். இதேவேளை, உள்நாட்டு பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி தனது உரையில் தௌிவுபடுத்தினார்.
  • மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
  • புதிதாக தெங்கு பயிர் செய்கையை மேற்கொள்ளத் திட்டமிடப்படும்
  • தொழிலாளர்கள் உள்நாட்டு இறப்பரை பயன்படுத்த ஆர்வமூட்டப்படுவர்
  • முள்ளுத்தேங்காய் செய்கை முற்றாகத் தடைசெய்யப்படும்
  • மிளகு, கறுவா போன்ற ஏற்றுமதிப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • பல்கலைக்கழகங்களின் கொள்ளளவை விஸ்தரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்
  • பாரம்பரிய கைத்தொழிலான பத்திக் கைத்தொழில், உள்நாட்டு ஆடை உற்பத்தி, பித்தளை, பிரம்பு, இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு சுயதொழில் ஊக்குவிப்பு வழங்கப்படும்
  • புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு பொருளாதாரத்தையும் தேசிய வருமானத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பால் பண்ணையாளர்கள், மற்றும் முட்டை உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்
  • விவசாயத்திற்கு சேதனப் பசளையை பயன்படுத்த ஊக்குவிப்போம்
  • மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்காக அனைத்து மீன்பிடித் துறைமுகங்களையும் நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • புதிய மீனவத் துறைமுகங்களை அமைக்கவும் சட்டப்பூர்வமற்ற வௌிநாட்டுப் படகுகள் இலங்கை கடற்பரப்பில் பிரவேசிப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்
என ஜனாதிபதி குறிப்பிட்டார்.