அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவத் தயார்: சிவநேசத்துரை சந்திரகாந்தன் பாராளுமன்றில் உரை

by Bella Dalima 20-08-2020 | 7:19 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பாராளுமன்றில் இன்று உரையாற்றினார். இதன்போது, மஹிந்த ராஜபக்ஸ முன்னெடுத்த அபிவிருத்திப் பணிகளுக்கு உதவியும் ஒத்தாசையும் புரிந்த தம்மை, கடந்த நல்லாட்சி அரசாங்கம் 5 வருடங்களாக திட்டமிட்டு சிறைப்படுத்தி வைத்திருப்பதாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறினார். தமக்கு சேவையாற்றும் படி மட்டக்களப்பு மக்கள் தன்னை தெரிவு செய்துள்ள நிலையில், பாராளுமன்றம் வருவதற்கு கூட ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோர வேண்டியுள்ளதாகவும் இவ்வாறு அனுமதி கோரி மக்களுக்கு சேவையாற்ற முடியாது எனவும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார். சமூக முரண்பாடுகள் காரணமாக தனது 16 வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததாகக் கூறிய அவர், அந்த அமைப்பின் நோக்கங்களும் கொள்கைகளும் பிழையாக இருந்ததன் காரணத்தால், அதிலிருந்து வௌியேறி ஜனநாயக ரீதியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை உருவாக்கி, அதன் மூலம் பல விடயங்களை செய்ததாக சுட்டிக்காட்டினார். மேலும், அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி விடயங்களுக்கும் 13 ஆவது சீர்திருத்தம் மூலம் மாகாண சபையை பலப்படுத்துவதற்கும் தொடர்ந்து உதவி வழங்கத் தயாராக இருப்பதாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறினார். இதேவேளை, பாராளுமன்றம் வருவதற்கு ஒவ்வொரு முறையும் தன்னால் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோர முடியாது என்பதால், மக்களுக்கு சேவையாற்றும் சந்தர்ப்பம் ஒன்றைத் தமக்கு சபாநாயகர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.