புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு 

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு 

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு 

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2020 | 10:22 am

Colombo (News 1st) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று (20) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

சபை அமர்வு ஆரம்பமாகிய போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பாராளுமன்ற அழைப்பு அறிக்கையை பாராளுமன்ற செயலாளர் நாயகம்
தம்மிக்க தசநாயக்க சமர்ப்பித்தார்.

இதனையடுத்து, 9 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவுசெய்யப்பட்டார்.

மஹிந்த யாப்பா அபேவர்தனவை சபாநாயகராக அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்ததுடன் ரஞ்சித் மத்தும பண்டார அதனை வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து, மஹிந்த யாப்பா அபேவர்தன சபாநாயகராக சத்தியப்பிரமாணம் செய்தார்.

இதனையடுத்து, இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்.

221 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகியன தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களை இதுவரை பெயரிடவில்லை.

இதனையடுத்து கட்சி தலைவர்கள், சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமன கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முதலாவதாக தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சபாநாயகர் அவர்களே, உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் மாகாண சபை நிர்வாகம் தொடர்பில் உங்களுக்கு சிறந்த அனுபவம் உள்ளது. பல்வேறு துறைகளில் அமைச்சராக பதவி வகித்துள்ளதால், பாராளுமன்ற சம்பிரதாயங்கள் உள்ளிட்ட பல விடயங்களில் உங்களுக்கு சிறந்த அனுபவமுள்ளது. அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சராக நீண்ட காலம் சேவையாற்றியுள்ளதால், பக்கச்சார்பின்றி சுயாதீனமாக கடமையாற்றுவதற்கு தேவையான சக்தி மற்றும் தைரியம் கிடைக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்

என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்