20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2020 | 7:46 pm

Colombo (News 1st) 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சட்டமூலத்தை சட்ட மா அதிபரிடம் அனுப்பி வைக்கவும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

19 ஆவது திருத்தத்தின் சில பகுதிகளை நீக்கி, சில பகுதிகளை வைத்திருப்பது தொடர்பில் ஆராய்ந்ததாகவும் அரசியலமைப்பு திருத்தம் மேற்கொண்டு முழுமையான அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான திட்டம் உள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, 19-ஐ மாத்திரம் பிடித்துக்கொண்டு திருத்தம் மேற்கொள்வதை தாம் முற்றாக எதிர்ப்பதாக தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கலாநிதி குணதாச அமரசேகர குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பை கொண்டு வர இரண்டு வருடமாகும் என கூறுகின்றனர். இரண்டு வருடங்கள் காத்திருந்தால் இந்த மூன்றில் இரண்டு குறைவடைந்து மூன்றில் ஒன்றாக அமையலாம். அப்போது எமக்கு மூன்றில் இரண்டு இல்லை இதனை செய்ய முடியாது என கூற வாய்ப்புண்டு. பிள்ளை பிறப்பதற்கே 10 மாதங்கள் தேவைப்படுகிறது. அரசியல் அமைப்பை உருவாக்க இரண்டு வருடங்கள் தேவையா? 19 ஆவது திருத்தத்தில் மாற்றத்தை கொண்டு வருவதில் எதற்காக அவசரம் தேவைப்படுகிறது. அந்த காலப் பகுதியில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இருந்த முரண்பாடு தற்போது இல்லை. தனிநபரின் சுயநல தேவை இல்லாவிட்டால், அதில் வேறு தேவை கிடையாது. உடடியாக 19-ஐ துண்டித்து மீளவும் பொருத்துங்கள்

என கலாநிதி குணதாச அமரசேகர கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்