10 பால் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

10 பால் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

10 பால் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2020 | 4:22 pm

Colombo (News 1st) அடுத்த 5 வருட காலத்தில் உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக பொருளாதார மீளுருவாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

பால் உற்பத்தித் துறையுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்ட பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் பசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது.

நாட்டின் பால் தேவைக்கு மேலதிகமாக, பால் உற்பத்தியை ஏற்றுமதி செய்யும் தரத்திற்குக் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் அதீத கவனம் செலுத்தியுள்ளதாக பொருளாதார மீளுருவாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி சார்பாக பிரதமர் அலுவலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தனியார் பிரிவுகளையும் இணைத்துக்கொண்டு பாரியளவிலான 10 பால் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சிறிய பால் பண்ணைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன், தோட்ட நிறுவனங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் காணிகளை அந்த நிறுவனங்களுக்கு வழங்கி, பால் உற்பத்தியை மேற்கொள்ள வழிசெய்வது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

கால்நடைகளுக்கான உணவிற்காக சோள உற்பத்தியை விஸ்தரிப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சோள பயிர் செய்கைக்காக அரச காணிகளை வருடாந்த குத்தகை திட்டத்தின் கீழ் பால் பண்ணையாளர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பசில் ராஜபக்ஸ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கூறியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்