மாலியில் இராணுவப் புரட்சி: ஜனாதிபதி இராஜினாமா

மாலி குடியரசில் இராணுவப் புரட்சி: ஜனாதிபதி இராஜினாமா

by Bella Dalima 19-08-2020 | 9:37 PM
Colombo (News 1st) மாலி குடியரசில் இராணுவப் புரட்சி ஏற்படுத்தப்பட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸின் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற மேற்கு ஆபிரிக்க நாடான மாலி குடியரசு, ஆபிரிக்காவின் எட்டாவது மிகப்பெரிய நாடாகும். ஜனாதிபதி இப்ராஹிம் பூபகரின் ஊழல் நிர்வாகம் காரணமாக நாட்டின் பொருளாதாரமும் பாதுகாப்பும் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்து எதிர்க்கட்சி கடந்த சில நாட்களாக பல்வேறு எதிர்ப்புகளை முன்னெடுத்தது. அவர்கள் பமாகோ சதுக்கத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளதாக நேற்று பிற்பகலில் தகவல் வௌியானது. இதனையடுத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் பொறுப்பை வகிக்கும் ஜனாதிபதியின் புதல்வர் ஆகியோர் இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டனர். மக்களை விடுவிக்கும் தேசிய குழு என அறிமுகப்படுத்திக் கொண்ட இராணுவ உறுப்பினர்கள் நாட்டின் ஆட்சியை தாம் கைப்பற்றவில்லை எனவும், நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் ஊடகங்களின் மூலம் அறிவித்துள்ளனர். இராணுவப் புரட்சி ஏற்பட்டு சில மணித்தியாலங்களில் ஜனாதிபதி இப்ராஹிம் பூபகர் தனது இராஜினாமாவை அறிவித்தார். இரத்தகளரியை ஏற்படுத்தி ஆட்சியில் இருக்கும் தேவை தமக்கு இல்லை எனவும், பாராளுமன்றத்தை கலைப்பதாகவும் ஜனாதிபதி இப்ராஹிம் பூபகர் கூறினார். ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோரை தமது பொறுப்பில் கொண்டுவரும் முன்பு மாலி இராணுவ வீரர்கள், கட் எனும் பிரதான இராணுவ முகாமை கைப்பற்றியிருந்தனர். கட் முகாமின் உப தலைவரான கேர்ணல் மாலிக் டியாவு மற்றும் மற்றொரு கட்டளை அதிகாரியான ஜெனரல் சாடியோ கமாரா ஆகியோரால் இந்த இராணுவப் புரட்சி வழிநடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைக்கு அவர்கள் அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளையும் தமது பொறுப்பில் வைத்துள்ளனர். மாலி குடியரசின் சாஹெல் பகுதி சில நாட்களாகவே கடுமையான மனிதப் பேரவலங்களை சந்தித்து வந்துள்ளதுடன், இன மோதல்கள் அதற்கு காரணமாக இருந்துள்ளன. இந்தப் பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை தலையீடு செய்திருந்ததுடன் தற்போதைக்கு அமைதிப் படைகள் மாலி குடியரசில் நிறுவப்பட்டுள்ளன. அங்கு இலங்கையின் சமாதானக் குழுக்களும் பணியாற்றுவதுடன், அவர்கள் தொடர்பாக இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்கவிடம் வினவியபோது, அங்கு ஏற்பட்டுள்ள நிலைமை அவர்களுக்கு எவ்வித அழுத்தத்தையும் கொடுக்காது என்று கூறினார்.