பாராளுமன்றில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ள பெண்களின் பிரதிநிதித்துவம்

by Bella Dalima 19-08-2020 | 8:52 PM
Colombo (News 1st) இலங்கை பாராளுமன்றத்தின் பெண் பிரதிநிதித்துவம் இம்முறை மேலும் குறைவடைந்துள்ளது. நாளை (20) கூடவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் 12 பெண் உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் மற்றும் தேசியப் பட்டியல் நியமனங்களுக்கு அமைய, இதுவரை 12 பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தலா ஒரு தேசியப் பட்டியலை பெற்றுள்ள நிலையில், அவற்றுக்கான உறுப்பினர்கள் இதுவரை பெயரிடப்படவில்லை. கடந்த பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களில் 13 பேர் பெண் உறுப்பினர்களாக இருந்தனர். இது விகிதாசார அடிப்படையில் 5.8 வீதமாகும். பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா மற்றும் மாலைத்தீவுகள் ஆகிய சார்க் நாடுகளில் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் இலங்கையை விட அதிகமாகவே உள்ளது. பாராளுமன்றங்கள் சங்கம் உலக அடிப்படையில் 188 நாடுகளில் மேற்கொண்ட தரப்படுத்தலில் இலங்கை 130 ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் இம்முறை பெண் பிரதிநிதித்துவம் 5.33 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, பவித்ரா வன்னியாராச்சி, கீதா குமாரசிங்க, ரஜிக்கா விக்ரமசிங்க, முதித்தா சொய்ஸா, கோகிலா குணவர்தன ஆகிய 06 பேர் நேரடியாக தேர்தல் மூலமாகவும், விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல, மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் தேசியப் பட்டியல் மூலமும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் டயனா கமகே பெயரிடப்பட்டுள்ளதோடு, தலதா அத்துக்கோரள மற்றும் ரோஹினி கவிரத்ன ஆகியோர் தேர்தலில் வெற்றியீட்டி பாராளுமன்ற ஆசனத்தை தக்கவைத்தனர். தேசிய மக்கள் சக்தி தமக்கான தேசியப் பட்டியல் ஆசனத்தை பெண் பிரதிநிதியான கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கு ஒதுக்கியுள்ளது. கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக செயற்பட்ட விஜயகலா மகேஸ்வரன் மற்றும் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா ஆகியோர் இம்முறை தோல்வி அடைந்தனர். தமிழ் பேசும் பெண் வேட்பாளர்கள் எவரும் இம்முறை தேர்தலில் வெற்றியீட்டாத நிலையில், தமிழ் பெண் பிரதிநிதித்துவம் அற்ற நிலையிலேயே ஒன்பதாவது பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இம்முறை பாராளுமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து மாத்திரம் 3 பெண் பிரதிநிதிகள் நேரடியாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் 50-ற்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்கள் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உலகின் முலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கவையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பெண் ஜனாதிபதியையும் பிரதம நீதியரசரையும் உருவாக்கிய இலங்கையில் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் குறைந்து காணப்படுகின்றமை கவலைக்குரியதே. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் எந்தவொரு பெண் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என்பதோடு, ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சந்திராணி பண்டார, சுமேதா ஜயசேன, அனோமா கமகே, ஸ்ரியாணி விஜேவிக்ரம, ஹிருணிக்கா பிரேமச்சந்திர, துசித்தா விஜேமான்ன, விஜயகலா மகேஷ்வரன் மற்றும் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா போன்றோரையும் மக்கள் நிராகரித்துள்ளனர். "அவளுக்கும் ஒரு வாக்கு" என இம்முறை தேர்தல் காலத்தில் எத்தனையோ விழிப்புணர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், மக்களின் தீர்மானம் முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கின்றது. பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் அவர்களுக்கே உரித்தான பிரச்சினைகளை உலகறியச் செய்யவும் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும். சட்ட ரீதியிலேனும் இதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவது தொடர்பில் இனியேனும் கவனம் செலுத்தப்படுமா?