அரச வங்கிகளில் முறைகேடுகள்: ஆராய குழு நியமனம்

அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகேடுகளை ஆராய குழு நியமனம்

by Staff Writer 19-08-2020 | 5:34 PM
Colombo (News 1st) அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகேடுகளை ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நிதி அமைச்சர் என்ற ரீதியில் முன்வைத்திருந்தார். குறித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு இன்று அனுமதி கிடைத்துள்ளதாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி, மக்கள் வங்கி, தேசிய முதலீட்டு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் அவற்றுடன் இணைந்த நிறுவனங்களில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதியின் பின்னர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள், இலக்குகளுக்கு முரணாகவும் வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகளுக்கு எதிராகவும் இடம்பெற்றுள்ள சந்தர்ப்பங்களை ஆராய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. அரச வங்கிகளில் இடம்பெற்ற வினைத்திறனற்ற நடவடிக்கைகள், கொடுக்கல் வாங்கல்களை நால்வரடங்கிய குழு மதிப்பீடு செய்யவுள்ளது. முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்நாயக்க குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பட்டயக் கணக்காளர் சுசந்த டி சில்வா, ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் நாயகம் ‌W.பிரேமாநந்த உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.