வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டார் பிள்ளையான்

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டார் பிள்ளையான்

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2020 | 5:23 pm

Colombo (News 1st) பாராளுமன்ற கன்னி அமர்வில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டார்.

சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று பகல் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பிற்கு மத்தியில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

பிள்ளையான் நாளை (20) நடைபெறவுள்ள பாராளுமன்ற கன்னி அமர்வில் கலந்துகொள்ள மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டீ.எஸ்.சூசைதாஸ் நேற்று அனுமதி வழங்கினார்.

நாளை நடைபெறவுள்ள கன்னி அமர்விலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் அமர்வுகளிலும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொள்ள அனுமதி வழங்கக்கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 14 ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தாக்கல் செய்யப்பட்ட இந்த நகர்த்தல் பத்திரம் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டீ.எஸ்.சூசைதாஸினால் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நகர்த்தல் பத்திரத்தில் கோரப்பட்டதற்கு அமைய, நாளை நடைபெறவுள்ள கன்னி பாராளுமன்ற அமர்வில் மாத்திரம் கலந்துகொள்ள அனுமதி வழங்கிய நீதிபதி, ஏனைய அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான அனுமதியை வழங்க முடியாது என அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில், கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ள பிள்ளையான் நாளை காலை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்