மின் துண்டிப்பிற்கு நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய செயலிழப்பா காரணம்?

by Staff Writer 19-08-2020 | 8:19 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதை அடுத்து தற்போது நாளாந்தம் 2 மணித்தியாலம் 45 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இவ்வாறான மின்சார நெருக்கடிக்கு அடிப்படையாக அமைந்துள்ள விடங்கள் என்ன? மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி நேற்று (18) சட்டன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இது தொடர்பாக கருத்து வௌியிட்டார். நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயலிழக்கும்போதெல்லாம் அதன் சூடு ஆறுவதற்கு சில நாட்கள் தேவை என கூறுகின்றனர். செயலிழந்ததன் பின்னர் சில மணித்தியாலங்களில் மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வந்தனர். அப்படியாயின், இரவு முதல் மீண்டும் ஏன் மின்வெட்டை அமுல்படுத்துகின்றனர், என சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பினார். தற்போது மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்காக ஓடித் திரிகின்றனர். கூடுதல் விலைக்கே அதனை கொள்வனவு செய்வார்கள் என அவர் கூறினார். புதிதாக வந்துள்ள மின்சக்தி அமைச்சருக்கும் அவரின் செயலாளருக்கும் இந்தப் பிரச்சினை தொடர்பில் எவ்விதத் தௌிவும் இருக்காது என சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டினார்.
 மின் உற்பத்தி திட்டம் என ஒன்றுள்ளது. அது குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டுள்ளது. பொது பயன்பாட்டு ஆணைக்குழுவும் இலங்கை மின்சார சபையும் அண்மையில் முரண்பட்டது எதற்காக? ஆணைக்குழுவின் அனுமதி இன்றி கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பிலேயே பிரச்சினை எழுந்தது. ஆனால், தற்போது கொள்வனவு செய்ய முடியும். அவரச நிலைமை என கூறி மின்சாரத்தை கொள்வனவு செய்வார்கள். அவசர நிலைமையை உருவாக்குபவரை அமைச்சர் டலஸ் கண்டுபிடிக்க முடியும். அப்போது விடயத்தைக் கண்டறியலாம். இதுவே மாஃபியா
என அவர் மேலும் குறிப்பிட்டார். கெரவலப்பிட்டி உப மின் விநியோக நிலையத்தில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக நாடு பூராகவும் மின் விநியோகம் தடைப்பட்டதென மின்சார சபை ஆரம்பத்தில் தெரிவித்தது. பின்னர் நாட்டின் மின் தேவையில் பெரும் பகுதியை உற்பத்தி செய்யும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் செயலிழந்ததால் தற்போது மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவர மேலும் மூன்று நாட்கள் செல்லலாம் என்று மின்சார சபை கூறுகின்றது. எவ்வாறாயினும், கெரவலப்பிட்டி உப நிலையத்தில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் செயலிழக்க வாய்ப்புகள் இல்லை என மின்சக்தி வல்லுநர்களும் மின்சக்தி தொழிற்சங்கங்களும் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று தமது அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார். மக்களின் பணத்தை செலவு செய்யாமல், தான் கடமைகளை ஆரம்பித்ததாக அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.