புலனாய்வு மீளாய்வுக் கூட்டம் முறையாக இடம்பெறவில்லை: நிலந்த ஜயவர்தன சாட்சியம்

புலனாய்வு மீளாய்வுக் கூட்டம் முறையாக இடம்பெறவில்லை: நிலந்த ஜயவர்தன சாட்சியம்

புலனாய்வு மீளாய்வுக் கூட்டம் முறையாக இடம்பெறவில்லை: நிலந்த ஜயவர்தன சாட்சியம்

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2020 | 9:26 pm

Colombo (News 1st) அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும் சாட்சியமளித்தார்.

தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என அவர் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பில் 2019 ஆம் அண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி வௌிநாட்டு புலனாய்வுத் தகவல் கிடைத்தாலும் அது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை என அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பிற்கு மேற்கொண்ட விஜயத்திற்கும், குறித்த புலனாய்வு தகவலுக்கும் தொடர்பில்லை என்பதால், தாக்குதலுக்கு முன்னர் ஜனாதிபதிடம் கையளிக்கப்பட்ட புலனாய்வுத் தகவல் கோவையில் அந்த தகவல்கள் உள்ளடக்கப்படாமையே அதற்கான காரணமாக அவர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டின் பின்னர் வாராந்தம் இடம்பெற வேண்டிய புலனாய்வு மீளாய்வுக் கூட்டம் முறையாக இடம்பெறவில்லையெனவும் நிலந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்ட நாள் வரை மூன்று கூட்டங்கள் மாத்திரமே இடம்பெற்றதாகவும் அவர் இன்று சாட்சியமளித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வெடிக்கச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை முறையாக இடம்பெறவில்லை என புலனாய்வுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு அறிவித்ததாகவும் நிலந்த ஜயவர்தன கூறியுள்ளார்.

காத்தான்குடியில் இடம்பெற்ற வெடிச்சம்பவம் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீம் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட பயிற்சியின் போது இடம்பெற்றிருக்கலாம் எனவும் சாட்சியாளரான அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்