பாட்டலி சம்பிக்க முன் பிணையில் விடுதலை

பாட்டலி சம்பிக்க முன் பிணையில் விடுதலை

பாட்டலி சம்பிக்க முன் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2020 | 4:10 pm

Colombo (News 1st) நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட முன் பிணையின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

இராஜகிரிய பகுதியில் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி சந்தீப் சம்பத் குணவர்தன என்பவரை விபத்திற்குள்ளாக்கியமை தொடர்பில் சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கவனயீனமாக வாகனத்தை செலுத்தி இளைஞர் ஒருவரை காயப்படுத்தியமை, விபத்தை தடுப்பதற்கு முயற்சிக்காமை உள்ளிட்ட விடயங்களின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்கை இல்லாது செய்ய போலி சாட்சியங்களைத் தயார் செய்தமை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளின் கீழ் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் நாளை மன்றில் ஆஜராகுமாறு மூன்று பிரதிவாதிகளுக்கும் அறிவிக்கப்பட்டிருந்த போதும், வழக்கின் முதலாவது பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்து இன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரியிருந்தார்.

தமது சேவை பெறுநர் , 09 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் நாளை கலந்துகொள்ள அனுமதி வழங்குமாறு கோரியும், அவர் மன்றில் ஆஜராக பிறிதொரு தினத்தை அறிவிக்குமாறும் பிரதிவாதிகள் சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அநுஜ பிரேமரத்ன கோரிக்கை விடுத்தார்.

அதற்கமைய, எதிர்வரும் 28 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, பிரதிவாதியின் கைவிரல் அடையாளத்தைப் பெறுவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, வழக்கின் ஏனைய பிரதிவாதிகளான பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியான திலும் துஷித குமார, வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல ஆகியோரை நாளைய தினம் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்