கன்னி அமர்வில் பங்கேற்க பிள்ளையானுக்கு அனுமதி

பாராளுமன்ற கன்னி அமர்வில் பங்கேற்க பிள்ளையானுக்கு அனுமதி 

by Chandrasekaram Chandravadani 18-08-2020 | 1:17 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ள பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்பதற்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டீ.எஸ்.சூசைதாஸ் இந்த அனுமதியை இன்று வழங்கியுள்ளார். சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள கன்னி அமர்விலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் அமர்வுகளிலும் கலந்துகொள்ள அனுமதி வழங்கக்கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 14 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த நகர்த்தல் பத்திரத்தை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. வழக்குத்தொடுநர் சார்பில் அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் இன்று ஆஜராகியிருந்தார். எனினும், சிவநேசத்துரை சந்திரகாந்தன் இதுவரை பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்யவில்லை என வழக்குத்தொடுநர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார். அதே சந்தர்ப்பத்தில், அவர் குற்றவாளி என இதுவரை நிரூபணமாகவில்லை எனவும் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பிரதிவாதிக்கு உள்ள அடிப்படை உரிமைகளுக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்ய ஆட்சேபனை இல்லை என வழக்குத்தொடுநர் சார்பில் ஆஜராகிய அரச சட்டத்தரணி மன்றில் தெரிவித்துள்ளார். எனினும், கன்னி அமர்வின் பின்னர் இடம்பெறக்கூடிய அமர்வுகளில் கலந்து கொள்வதற்கான அனுமதியை இன்றே வழங்க மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என வழக்கு தொடுநர் சார்பில் மன்றுக்கு கூறப்பட்டுள்ளது. இதனால் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அந்த அமர்வுகளில் பங்கேற்க, அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒருவரை விளக்கமறியலில் இருந்து அழைத்துச்செல்ல நாட்டில் எவ்வித வௌிப்படையான சட்ட ஏற்பாடுகளும் இல்லை என இதன்போது மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். எனினும், இந்த விடயம் ஒருவரின் தனிப்பட்ட விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக நாளை மறுதினம் இடம்பெறும் கன்னி அமர்வில் விசேட பாதுகாப்பின் கீழ் பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முற்பகல் 9.30-க்கு வழக்கு அழைக்கப்பட்ட போது சிவநேசத்துரை சந்திரகாந்தன் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனினும், தமது கட்டளையை பிரதிவாதியின் முன்னிலையில் அறிவிக்க வேண்டும் என்பதால், அவரை மன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் உத்தரவிற்கு அமைய, முற்பகல் 11 மணிக்கு சிவநேசத்துரை சந்திரகாந்தன் மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் வழக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நகர்த்தல் பத்திரத்தில் கோரப்பட்டதற்கு அமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி மாத்திரம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கிய நீதிபதி, ஏனைய அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான அனுமதியை இன்று வழங்க முடியாது எனவும் அறிவித்துள்ளார்.