பட்டதாரிகள் சங்கங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நியமனக் கடிதங்களில் பெயர்கள் நீக்கம்: பட்டதாரிகள் சங்கங்கள் எதிர்ப்பு

by Staff Writer 18-08-2020 | 10:14 PM
Colombo (News 1st) தொழில் வாய்ப்பிற்காக உள்வாங்கும் நியமனக் கடிதங்களில் குறிப்பிடப்பட்ட சில பட்டதாரிகளின் பெயர்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்களில் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் சில பட்டதாரிகளின் சங்கங்கள் இன்று கொழும்பில் எதிர்ப்பை வௌிப்படுத்தியதுடன், அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தினர். ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வௌியிட்டனர். குறித்த குழுவினர் ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாகச் சென்றனர். கடந்த மார்ச் மாதம் வௌியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பெயர்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர். ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்புரிமையைக் கருத்தில் கொண்டு இதற்கு முன் தனியார் துறையில் கடமையாற்றியவர்கள் புதிய பெயர்ப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர். அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு குழுவினருக்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகளை சந்தித்து பிரச்சினையை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வௌியேறினர். இதேவேளை, கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஜனாதிபதி பொது உறவுகள் பிரிவை அண்மித்த சர்வதேச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டக் கல்வியை பூர்த்தி செய்த மாணவர்கள் முறைப்பாட்டை முன்வைத்தனர். குறித்த பட்டத்தை வழங்கிய பல்கலைக்கழகத்தை கருத்திற்கொண்டு தாம் வேலைவாய்ப்பின் போது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தினர். மார்ச் மாதம் அரச வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் நேற்று வௌியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதால், தாம் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.