சிங்கராஜ வனத்தில் வீதி அபிவிருத்தி இடைநிறுத்தம்

சிங்கராஜ வன எல்லையில் இடம்பெறும் வீதி அபிவிருத்தியை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 18-08-2020 | 6:08 PM
Colombo (News 1st) உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தின் எல்லையில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த செயற்றிட்டத்தில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படும் பட்சத்தில், அதுகுறித்து மீளாய்வு செய்து அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்தலுவகே குறிப்பிட்டார். நாட்டிலுள்ள உலக மரபுரிமைகளில் முதன்மையாக விளங்கும் சிங்கராஜ வனத்தின் எல்லையில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 8 அடி அகலமான கொங்ரீட் வீதி இதுவரை அங்கு காணப்பட்டதுடன், அதனை 12 அடி அகலமாக விஸ்தரித்து புதிய வீதி நிர்மாணிக்கப்படுவதாக வன பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து இந்த செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.