புதிய விளையாட்டுத்துறை சட்டத்தை கொண்டு வருவதே நோக்கம்: நாமல் ராஜபக்ஸ

புதிய விளையாட்டுத்துறை சட்டத்தை கொண்டு வருவதே நோக்கம்: நாமல் ராஜபக்ஸ

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2020 | 1:52 pm

Colombo (News 1st) புதிய விளையாட்டுத்துறை சட்டத்தை கொண்டு வருவதே தமது முக்கிய நோக்கம் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஸ இன்று கடமைகளை ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குடும்பத்தவர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

சர்வமத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை ஆரம்பித்த நாமல் ராஜபக்ஸ் நியூஸ்ஃபெஸ்டிற்கு பிரத்தியேக செவ்வியளித்தார்.

கேள்வி: விளையாட்டுத்துறையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் தற்போது உங்கள் முன் உள்ளன. எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளீர்கள்?

நாமல் ராஜபக்ஸ: 1973 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விளையாட்டுத்துறை சட்டமே நான்கு தடவைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு புதியதொரு விளையாட்டு சட்டத்தை கொண்டுவர வேண்டியதே நாம் முதலில் செய்ய வேண்டிய விடயம் என்று நான் நினைக்கிறேன். ஆரம்பத்தை திருத்தாமல் இடையிடையே திருத்தங்களை மேற்கொள்வதால் பலனில்லை. பிரதமரினதும் ஜனாதிபதியினதும் ஆலோசனைகளுக்கு அமைவாக சட்டத்தரணிகள் சங்கம், சட்ட மா அதிபர் திணைக்களத்துடனும் நீதி அமைச்சருடனும் கலந்தாலோசித்து நாம் விளையாட்டுத்துறை சட்டத்தை புதிதாக உருவாக்க வேண்டும். அந்த விடயங்களின் பிரகாரமே இந்த விளையாட்டுத்துறை நீடிக்கும் விதம் தீர்மானிக்கப்படும். சகல விளையாட்டு சங்கங்களும் அரசாங்கத்தில் தங்கியிருக்கும் விதத்திலேயே சட்டத்தில் உள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை எடுத்துக்கொண்டால், விளையாட்டுத்துறை பொருளாதாரம் மூலம் நூற்றுக்கு இரண்டு, மூன்று வீத வருமானம் கிடைக்கிறது. நாம் பழைய சட்ட திட்டங்களுடன் இருப்பதன் காரணமாகவே எம்மால் அந்த நிலைக்கு செல்ல முடியாதுள்ளது.

கேள்வி: நாம் இரண்டு தடவைகள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளோம். கிரிக்கெட் விளையாட்டிற்கு எவ்வாறான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க நீங்கள் எதிர்பார்த்துள்ளீர்கள்?

நாமல் ராஜபக்ஸ: கிரிக்கெட் விளையாட்டு மாத்திரமல்ல. சகல விளையாட்டுகளையும் நாம் மேம்படுத்த வேண்டும். அதற்காக அந்தந்த விளையாட்டு சங்கங்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும். அதேபோன்று, அந்த நிறுவனங்களின் நேர்மைத்தன்மை அமைச்சிலும், விளையாட்டுத்துறை நிறுவனங்களிலும் பல்வகைத் தன்மையை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி: இலங்கையில் இளைஞர், யுவதிகளுக்காக எவ்வாறான திட்டம் உங்களிடம் உள்ளது?

நாமல் ராஜபக்ஸ: எமது இளைஞர், யுவதிகளின் தேவைகளை உலகத் தொழில் வர்த்தக சந்தைக்கு ஏற்றவாறாக உருவாக்க வேண்டும். அதற்கான பயிற்சியைப் பெற வேண்டும். பொறியியல் பயிற்சியாகலாம், சிறிய மற்றும் மத்திய வியாபாரமாக இருக்கலாம், கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் திட்டமாக இருக்கலாம், ஒழுக்கம் மற்றும் கலாசார விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இவற்றை எதிர்வரும் கால எல்லைக்குள் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: கிராமத்தில் பிறந்த திறமைசாலிகள் தேசிய மட்டத்திற்கு உயர்ந்து இலங்கையின் நாமத்தை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு உங்களிடம் வேலைத்திட்டங்கள் ஏதும் உண்டா?

நாமல் ராஜபக்ஸ: நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்த கிராமத்து விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும். அடுத்த வாரமளவில் புதிதாக விளையாட்டுத்துறை பேரவையை நியமிப்போம். விளையாட்டுத்துறை பேரவையில் தொழில்சார் ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் செயற்படக்கூடிய​வர்களை நியமிப்போம். இந்த நாட்டில் கிராமிய மட்டத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான சகல அதிகாரங்களையும் அவர்களுக்கு வழங்குவோம்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்