மின் தடை குறித்த விசாரணைக்காக குழுவொன்று நியமனம் 

மின் தடை குறித்த விசாரணைக்காக குழுவொன்று நியமனம் 

மின் தடை குறித்த விசாரணைக்காக குழுவொன்று நியமனம் 

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2020 | 7:49 am

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக 9 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ராஹூல அதலகேயின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.

மின் விநியோகம் தடைப்பட்டமை குறித்து ஆராய்ந்து 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த குழுவிற்கு பணிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் முதற் கூட்டம் இன்று (18) காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதேவேளை, மின் விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபையிடம் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில், முழுமையான அறிக்கையை ஒரு மாதத்திற்குள் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளவிய ரீதியில் தடைப்பட்ட மின்சார விநியோகம் நேற்றிரவு (17) 10 மணியளவில் வழமைக்கு திரும்பியதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், தொழில்நுட்ப கோளாறு தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதால் நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், நீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு பௌசர் மூலம் நீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் நேற்று (17) நண்பகல் 12.35 மணியளவில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டது.

2016 ஆம் ஆண்டின் பின்னர் நாடளாவிய ரீதியில் நேற்று மின்சார விநியோகத்திற்கு தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மின்சார தடை காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன், கொழும்பின் அனைத்து பகுதிகளிலும் வீதி சமிக்ஞை விளக்குகள் செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்