பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் 13 பேருக்கு விளக்கமறியல்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் 13 பேருக்கு விளக்கமறியல்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் 13 பேருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2020 | 3:47 pm

Colombo (News 1st) போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேரும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேகநபர்கள் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை.

சுகாதார பாதுகாப்பு கருதி அவர்களை மன்றில் முன்னிலைப்படுத்தவில்லை என சிறை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பொடி லெசி’ என்பவரின் சகாவான, தற்போது துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் உதார சம்பத் என்பவரின் வழிநடத்தலின் கீழ் இலங்கைக்கு அனுப்பப்படும் ஹெரோயினை சந்தேகநபர்கள் வௌியில் எடுத்துச்சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்காக சந்தேகநபர்களுக்கு 100 இலட்சம் ரூபா போக்குவரத்து கட்டணத்தை செலுத்தியமைக்கான சாட்சி முன்னிலையாகியுள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அறிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலினூடாக முறையற்ற வகையில் நிதி திரட்டியமையால், நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் 13 சந்தேகநபர்களில், பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்களான பொலிஸ் இன்ஸ்பெக்டர் லயனல் ஜயரத்ன மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டரான உதார சதுரங்க உள்ளிட்ட 05 பேருக்கு எதிராகவும் நிதிதூய்தாக்கல் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்