நாடளாவிய ரீதியில் நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு 

நாடளாவிய ரீதியில் நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு 

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2020 | 4:59 pm

Colombo (News 1st)  இன்று முதல் அமுலாகும் வகையில், நான்கு நாட்களுக்கு நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

முழு நாடும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கீர்த்தி கருணாரத்ன தெரிவித்தார்.

அதற்கமைய, முதல் வலயத்தில் மாலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

இரண்டாவது வலயத்திற்கு இரவு 7 மணி தொடக்கம் 8 மணி வரை மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

மூன்றாவது வலயத்தில் இரவு 8 மணி தொடக்கம் 09 மணி வரையும், நான்காவது வலயத்தில் இரவு 09 மணி தொடக்கம் 10 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின் பிறப்பாக்க கட்டமைப்பில் மின்சார உற்பத்தி வழமைக்கு திரும்பும் வரை நான்கு நாட்களுக்கு மாத்திரம் மின்சார விநியோகத்தைத் துண்டிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

நேற்று நண்பகல் 12.30 அளவில் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

கெரவலப்பிட்டிய உப மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

இதனால் நுரைச்சோலையில் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற மூன்று இயந்திரங்கள் செயலிழந்தன.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவர சில தினங்கள் தேவைப்படுகின்றமையே தற்போதைய நெருக்கடிக்கு காரணமாகும்.

2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி இதேபோன்று நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட பொது பயன்பாட்டு ஆணைக்கு மீண்டும் இத்தகைய நிலை ஏற்படாதிருப்பதற்கான பரிந்துரைகளை இலங்கை மின்சார சபைக்கு முன்வைத்தது.

எனினும், அந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டனவா என்பது தொடர்பில் ஆணைக்குழு மீளாய்வு செய்யவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து ஏழு வருடங்களில் மூன்று தடவைகள் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதியும் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 25 மற்றும் மார்ச் 13 ஆகிய தினங்களிலும் இவ்வாறு மின்சார விநியோகம் நாடளாவிய ரீதியில் தடைப்பட்டது.

ஏழு வருடங்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட பரிந்துரைகளை அதே வகையில் 2016 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை மின்சார சபைக்கு வழங்கிய பொது பயன்பாட்டு ஆணைக்குழு, மின்சார விநியோகம் தடைப்படுவதைத் தவிர்ப்பதற்கு நீண்டகால நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கியது.

இந்த பரிந்துரைகள் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சூரியசக்தி மின் கலன்கள் ஊடாக வீடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருந்ததால், அதற்கு பொருந்தும் வகையில் மின் பிறப்பாக்கிக் கட்டமைப்பினை நவீனமயப்படுத்த வேண்டியிருந்தது.

இதனை நடைமுறைப்படுத்தத் தவறிய இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் இன்று சூரிய சக்தி மின்சாரத்தை குறைகூறுவதைக் காண முடிகிறது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்