மின்சார துண்டிப்பு குறித்து ஆராய குழு நியமனம்

மின்சார துண்டிப்பு தொடர்பில் ஆராய குழுவொன்று நியமனம் 

by Staff Writer 17-08-2020 | 5:30 PM
Colombo (News 1st) மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கு மேலும் சில மணித்தியாலங்கள் தேவை என மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார் சம்பவம் தொடர்பில் மின்சக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இணைந்து ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக உன்னிப்பாக அவதானித்ததாக அமைச்சர் கூறியுள்ளார். இதன்பின்னர் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என இந்த குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவம் மீள நிகழாமையை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் பிரிவினர் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை. லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளில் எவ்வித கோளாறுகளும் ஏற்படவில்லை என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார். எனினும், ஏனைய மின்னுற்பத்தி நிலையங்களின் மின்பிறப்பாக்கிகள் அனைத்தும் தற்போது சோதனைக்குட்படுத்தி சீர்செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் இன்று நண்பகல் 12.35 மணியளவில் கோளாறு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.