களனி தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்கள் இன்று திறப்பு

களனி தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்கள் இன்று திறப்பு

by Fazlullah Mubarak 17-08-2020 | 8:27 AM

களனி பல்கலைக்கழகம் தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து பல்கலைக்கழகங்களும் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (17) திறக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அனைத்து துணை வேந்தர்களுக்கும் அறிவித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதனிடையே, களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகப்பிரிவு பணிப்பாளர் விஜயாநந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய, பல்கலைக்கழக நடவடிக்கைகள் யாவும் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். பின்பற்றப்பட வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகளை சுகாதார தரப்பினர் வழங்கியுள்ளதாகவும் அதற்கு தேவையான நடவடிக்கைகைள எடுப்பதற்கு துணை வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, பல்கலைக்கழக விடுதிகளில் அறையொன்றில் தங்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய எந்தவொரு தடையுமின்றி மாணவர்கள் வழமை போன்று விடுதியில் தங்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.