மஞ்சள் தூளில் கலப்படம்

மஞ்சள் தூளில் கலப்படம்

by Staff Writer 16-08-2020 | 1:30 PM
Colombo (News 1st) சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மஞ்சளில் பெரும்பாலானவற்றில் கோதுமை மா மற்றும் அரிசி மா கலந்துள்ளமை தெரியவந்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் இது கண்டறியப்பட்டுள்ளது. மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மாவுடன் வர்ணங்களை கலந்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அதற்கமைய, சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மஞ்சளின் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு, அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டிருந்தது. அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் மஞ்சள் தூளின் அரைவாசியில் கோதுமை மா மற்றும் அரிசி மா கலந்துள்ளமை தெரியவந்துள்ளது. மஞ்சள் தூளுடன் பல்வேறு பொருட்கள் கலந்து விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில், மாதிரிகள் பெறப்பட்டு தொடர்ந்தும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.