by Staff Writer 15-08-2020 | 3:44 PM
Colombo (News 1st) 175 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது விபரங்களை சமர்ப்பித்துள்ளனர்
பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களில் 175-இற்கும் அதிகமானோர் இதுவரையில் தம்மை பதிவு செய்துள்ளதாக பாராளுமன்றம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி 9 ஆவது பாராளுமன்றம் முதற்தடவையாகக் கூடவுள்ள நிலையில், 175 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது விபரங்களை சமர்ப்பித்துள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நிகழ்நிலை (Online) ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.
எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்யும் சந்தர்ப்பத்தில் இந்த தகவல்கள் அவசியம் என்பதால், தமது விபரங்களை நிகழ்நிலை ஊடாக சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்ற கன்னி அமர்வின் போது பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதியால் புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் வௌியிடப்படவுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9.30 க்கு கன்னி அமர்வில் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார் என பாராளுமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் அல்லது உறுதிமொழி ஏற்பர்.
அதனையடுத்து பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி தெரிவுக்குழு தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுவர்.
அதன் பின்னர் பாராளுமன்றம் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்படும் என பாராளுமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.