பாரதத்தின் 74 ஆவது சுதந்திர தினம்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

பாரதத்தின் 74 ஆவது சுதந்திர தினம்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2020 | 4:38 pm

Colombo (News 1st) பாரதத்தின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

சவால் மிக்க இந்தத் தருணத்தில் இந்திய நாட்டின் விடுதலைக்கும் மக்களின் சுதந்திரத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு பலத்திலிருந்து வலிமையை நோக்கி பயணிக்கட்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த சுதந்திர தினத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரண்டு நாடுகளினதும் பிரஜைகளின் நலனுக்காக தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தேசம் அமைதியுடன் செழிக்கட்டும் எனவும், அதற்காக அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விடுத்துள்ள ட்விட்டர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையுடனான நட்புறவிலுள்ள விசேட பிணைப்பை தொடர்ந்தும் பேணுவதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் வாழ்த்திற்கு ட்விட்டரில் பதிலளித்து குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் தலைமையில் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பில் இன்று காலை நடைபெற்றன.

இந்திய உயர்ஸ்தானிகரின் கொழும்பிலுள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வின் முக்கிய அம்சமாக இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.

பாரத சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய உப உயர்ஸ்தானிகராலயத்தில், உப உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்தர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையை உப உயர்ஸ்தானிகர் வாசித்தார்.

அதனையடுத்து, கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் மரநடுகையும் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, பாரதத்தின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டி இந்திய உப உயர்ஸ்தானிகர் தீவேந்திர சிங் தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்