நிகோபார் தீவில் பாரிய துறைமுகம்: இந்தியா திட்டம்

நிகோபார் தீவில் பாரிய துறைமுகத்தை நிர்மாணிக்க இந்தியா திட்டம்

by Bella Dalima 14-08-2020 | 7:48 PM
Colombo (News 1st) இந்து சமுத்திரத்தில் கப்பல் போக்குவரத்து தொடர்பான சீனாவின் திட்டங்களை சவாலுக்குட்படுத்தும் செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பிக்க இந்தியா தயாராகியுள்ளது. ஒரே தீர்மானம், ஒரே நோக்கம் செயற்றிட்டத்தின் கீழ் சீனா இந்து சமுத்திரத்தில் இலகுவாக ஆபிரிக்காவையும் இந்தியாவையும் இணைக்கும் பழைய சேது சமுத்திரத் திட்டத்தை மேம்படுத்தும் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட முத்துமாலை எனும் தொனிப்பொருளில் சீனா அறிமுகப்படுத்தும் இந்த செயற்றிட்டத்தின் கீழ் பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைத்தீவு, சோமாலியா மற்றும் இலங்கை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்துள்ளது. நெருக்கடிமிக்க கிழக்கு - மேற்கு சர்வதேச கடல் மார்க்கத்தை அண்மித்த அமைவிடமான ஹம்பாந்தோட்டை துறைமுகம் தற்போது 99 வருடங்கள் குத்தகைக்கு சீனாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இங்கே செயற்படும் அதிகாரங்களைக் கொண்ட நிறுவனங்களின் பெரும் பங்கு சீனா வசமே உள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து பிற கப்பல்களை நிறுத்தும் துறைமுகமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை கைப்பற்றுவதற்கு கடந்த காலத்தில் இந்தியா கடும் முயற்சி எடுத்தது. இந்தியா, ஜப்பான், இலங்கை ஒருங்கிணைந்த செயற்றிட்டமாக கிழக்கு முனையத்தை மேம்படுத்த யோசனை முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கம் இந்தியாவின் அதானி வர்த்தகக் குழுமத்திடம் கிழக்கு முனையத்தை குத்தகைக்கு வழங்க உத்தேசித்தது. தொழிற்சங்கங்கள் அதற்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்களை அடுத்து அந்தத் திட்டம் கிடப்பில் உள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான இந்தியாவின் எதிர்பார்ப்புகள் படிப்படியாக நழுவிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் தற்போது நிகோபார் தீவுப் பகுதியில் பிற கப்பல்களை நிறுத்தும் துறைமுகத்தை நிர்மாணிக்க உத்தேசித்துள்ளனர். சென்னையிலிருந்து நிகோபார் தீவுக்கு கடலுக்கடியில் தொடர்புபடுத்தப்பட்ட அதிவேக தொலைத்தொடர்பு கேபிள் கட்டமைப்பை திறந்துவைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது திட்டத்தை அறிவித்தார்.
அதிசிறந்த நிகோபாரில் பிற கப்பல்களை நிறுத்தும் வசதிகள் கொண்ட துறைமுகமொன்றை நிர்மாணிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்காக 10 ஆயிரம் இந்திய கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் துறைமுகம் தயாரான பின்னர் பாரிய கப்பல்கள் மிக இலகுவாக அங்கு தரித்து நிற்க முடியும்
என மோடி குறிப்பிட்டார். நிகோபார் தீவின் தென் பகுதியில் தீர்வையற்ற சுதந்திர களஞ்சியசாலை தொகுதி வலயத்தை நிர்மாணித்து கொள்கலன் கப்பல்களை நிறுத்துமிடத்தை உருவாக்க அதன் நிர்வாகம் கடந்த வருடத்தில் திட்டமிட்டது. கொழும்பு, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் க்லேங் துறைமுகத்திற்கு மாற்றீடாக இந்திய கப்பல் வர்த்தகத்துக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். நிகோபார் தீவு மற்றும் தீர்வை வரியற்ற சுதந்திர களஞ்சியசாலை வசதிகளை விரிவாக்கும் செயற்றிட்டம் வெற்றியளித்தால் கிழக்கு - மேற்கு கடல் மார்க்கத்தை அண்மித்து புதிய போட்டியாளர்கள் உருவாகலாம். இந்தப் பின்புலத்தில் இந்து சமுத்திர வலயத்தின் கப்பல் வர்த்தகத்தில் பலசாலியாகும் சீனாவின் முயற்சி வெற்றியளிக்குமா? இந்தியாவின் புதிய வருமான வழிக்கு முன்பாக கொழும்பு துறைமுகத்தினுடைய கிழக்கு முனையத்தின் எதிர்காலம் என்னவாகும்?