by Staff Writer 14-08-2020 | 5:37 PM
Colombo (News 1st) தேசியப் பட்டியல் ஆசன ஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் பிரதித் தலைவரும் இம்முறை பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவருமான நசீர் அஹமட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் இணக்கப்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை உதாசீனப்படுத்துவது, அதன் பங்காளிகளின் உறவுகளில் விரிசலை ஏற்படுத்துமென நசீர் அஹமட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவுடனான இணக்கப்பாடுகளில் நம்பிக்கை வைத்தே, முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பணிகளை முன்னெடுத்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொகுதி விட்டுக்கொடுப்பு, ஒத்துழைப்பு மற்றும் மாவட்டப் பலம் என்பவற்றைக் கருதியே சில தியாகங்களையும் தமது கட்சி செய்ததாக நசீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தியாகங்களை கௌரவித்து, தேசியப் பட்டியல் வழங்குவதாக உடன்பாடும் உத்தரவாதமும் வழங்கப்பட்டதாக நசீர் அஹமட் கூறியுள்ளார்.
எனினும், வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, தமது கட்சிக்கு மட்டுமன்றி முஸ்லிம் சமூகத்திற்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக நசீர் அஹமட்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் ஹக்கீம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் வாசற்படிக்கு போவதும் வருவதுமாக அலைக்கழிக்கப்படுவது கவலைக்குரியது என நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஏமாற்றங்கள் ஏற்படுமென தெரிந்திருந்தால், கட்சியின் தனித்துவ சின்னத்தில் போட்டியிட்டிருப்போம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பயன்படுத்தி, தன்னைப் பலப்படுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பலவீனப்படுத்தியுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.