புதிய சபாநாயகர் யார்; 13ஆவது திருத்தத்திற்கு என்ன நேரப்போகின்றது?

by Staff Writer 14-08-2020 | 7:08 PM
Colombo (News 1st) பாராளுமன்றம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி முற்பகல் 9.30-க்கு கூடும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு நேற்று (13) வெளியிடப்பட்டது. அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் அதிகாரங்களுக்கு அமைய, பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அறிவிப்பை ஜனாதிபதி வௌியிட்டுள்ளார். பாராளுமன்றத்திற்கு மக்களின் வாக்குகளால் நேரடியாக 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், தேசியப் பட்டியலின் மூலம் 27 உறுப்பினர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி, எமது மக்கள் சக்தி கட்சி ஆகியன தேசியப் பட்டியல் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு எவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் யார் என்பது தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது. இதற்காக குறிப்பிடப்படும் பெயர்களில், மஹிந்த யாப்பாவின் பெயரும் முக்கிய இடம்பெறுகின்றது. இந்த விடயம் தொடர்பில் அவர் இவ்வாறான பதிலை வழங்கினார்,
 சபாநாயகர் பதவி இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்த பின்னர் உச்சபட்சம் செயற்பட முடியும்
புதிய பாராளுமன்றத்தின் முக்கிய நடவடிக்கை என்ன என்பது குறித்தும் தற்போது பேசப்பட்டு வருகின்றது. 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மறுசீரமைத்து 20 ஆவது திருத்தத்தை விரைவில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திய 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கடந்த காலத்தில் பொதுஜன பெரமுன மற்றும் கூட்டுக் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுத்தல், ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகள், பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் விடயம் என்பன குறித்தும் விமர்சிக்கப்பட்டது. அந்தக் குறைபாடுகளை நீக்கி, இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தை மிக விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக இதுகுறித்து வினவியபோது நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். அதற்கான வரைபைத் தயாரித்து வருவதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார். 19 ஆவது திருத்தத்தையும் மாகாண சபை முறை உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தையும் பொதுஜன பெரமுன மற்றும் கூட்டுக்கட்சிகள் தொடர்ந்தும் விமர்சித்து வந்தன. இருபதாவது திருத்தம் முதலில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், 13ஆவது திருத்தத்திற்கு என்ன நேரப்போகின்றது? மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேக இன்று கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வின்போது, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
 நான் 13ஆவது திருத்தத்தை கடுமையாக எதிர்த்த ஒருவர். 13 ஆவது திருத்தத்தை எதிர்த்த என்னிடம், மாகாண சபைகள் ஒப்படைக்கப்பட்டமை, விதியின் நகைச்சுவை என்றே கருதுகிறேன். எனினும், அதிலுள்ள பாதகமான திருத்தங்களை இரத்து செய்யும் வரை, எந்தவகையிலும் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நாம் நிச்சயமாக வழங்கப்போவதில்லை என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் தௌிவாகக் கூறிக்கொள்கின்றேன்