இளம் தலைவரிடம் தலைமைத்துவத்தைக் கையளிக்கவுள்ளதாக ஐ.தே.க தெரிவிப்பு

இளம் தலைவரிடம் தலைமைத்துவத்தைக் கையளிக்கவுள்ளதாக ஐ.தே.க தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2020 | 6:53 pm

 Colombo (News 1st) தலைமைத்துவத்தை கட்சி மற்றும் ஆதரவாளர்களால் உருவாக்கப்படும் இளம் தலைவரிடம் விரைவில் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது.

கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் இந்தத் தீர்மானம் ஊடகங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று முற்பகல் 10 மணியளவில் கட்சித் தலைமையகத்தில் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, ருவன் விஜயவர்தன, பாலித ரங்கே பண்டார, தயா கமகே உள்ளிட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

செயற்குழுக் கூட்டம் நிறைவடைவதற்கு முன்பே, தயா கமகே கட்சித் தலைமையகத்திலிருந்து வெளியேறினார்.

சுமார் 2 மணித்தியாலங்கள் நீடித்த இந்தக் கூட்டத்தின் பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.

இதன்போது,

தேர்தல் பெறுபேற்றை ஆராய்ந்து என்ன செய்யலாம் என்பது குறித்து கவனம் செலுத்தினோம். அதற்கமைய எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மனித்தோம். தலைமைத்துவத்தை எவ்வாறு எதிர்கால சந்ததியிடம் கொண்டு செல்வது என்பது தொடர்பில் கட்சியின் சகலரும் கவனம் செலுத்தியுள்ளனர். பொருந்தக்கூடிய, பொருத்தமற்ற சகல யோசனைகளையும் ஆராய்ந்து செயற்படுத்த கட்சி என்ற ரீதியில் நடவடிக்ைக எடுக்கப்படும்

என வஜிர அபேவர்தன கூறினார்.

கடந்த பொதுத் தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதாக செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்கு புதிய தலைவரை தெரிவு செய்கின்ற விடயத்தில் ஆதரவாளர்களின் யோசனைகளுக்கும் முன்னுரிமை அளித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கட்சி மற்றும் ஆதரவாளர்களில் இருந்தே தெரிவு செய்யப்படுகின்ற இளம் தலைவர் ஒருவரிடம் தலைமைத்துவத்தை கையளிக்க இன்று தீர்மானிக்கப்பட்டதாக கட்சி தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்