by Staff Writer 13-08-2020 | 8:52 PM
Colombo (News 1st) அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் சிலர் இன்று தமது கடமைகளை ஆரம்பித்தனர்.
வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கிருலப்பனையிலுள்ள ஊடக அமைச்சில் இன்று தமது கடமைகளை ஆரம்பித்தார்.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இன்று சுப நேரமான முற்பகல் 9 மணி அளவில் தமது கடமைகளை ஆரம்பித்தார்.
புதிய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று முற்பகல் கல்வி அமைச்சில் கடமைகளை ஆரம்பித்ததுடன், முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் இதன்போது பிரன்னமாகியிருந்தார்.
புதிய அரசாங்கத்தின் நீர் வளங்கள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பெலவத்தையில் உள்ள அமைச்சில் இன்று முற்பகல் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசண்ண ரணதுங்க இன்று காலை சுப நேரமான 6.45 அளவில் உலக வர்த்தக சந்தைக் கட்டடத்தொகுதியிலுள்ள அமைச்சில் தமது கடமைகளை ஆரம்பித்தார்.
புதிய அரசாங்கத்தின் பெருந்தெருக்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குருநாகல் மலியதேவ கல்லூரிக்கு முன்பாக உத்தேச புதிய சுரங்க பாதையை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டி கடமைகளை ஆரம்பித்தார். 558 இலட்சம் ரூபா செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் குருநாகல் மேயர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வர்த்தகத்துறை அமைச்சராக நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட கலாநிதி பந்துல குணவர்தன இன்று அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.
இதேவேளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார்.
கொழும்பு 10, மாளிகாவத்தையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று காலை தமது கடமைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தனர்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு, பிராந்திய ஒத்துழைப்புகளுக்கான இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இன்று காலை 10.30 அளவில் தனது அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.
மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மத வழிபாடுகளுடன் செத்சிறிபாயவில் உள்ள அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார்.
கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் விநியோகத் திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெலவத்தையில் உள்ள நீர் வழங்கல் அமைச்சில் இன்று முற்பகல் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
நகர அபிவிருத்தி, கடற்கரை பாதுகாப்பு, கழிவகற்றல், சமூக தூய்மையாக்கல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா பத்தரமுல்லையில் உள்ள அமைச்சில் இன்று கடமைகளை ஆரம்பித்தார்.
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் துறை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நாராஹேன்பிட்டியில் உள்ள அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.
விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இன்று தமது அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.