அங்கொட லொக்கா மரண வழக்கு: மூவரிடம் விசாரணை

அங்கொட லொக்கா மரண வழக்கில் கைதான மூவரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

by Staff Writer 13-08-2020 | 4:33 PM
Colombo (News 1st) பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான அங்கொட லொக்காவின் மரண வழக்கில் கைதான மூவரையும் மூன்று நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோயம்புத்தூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடந்த மாதம் கோயம்புத்தூரில் உயிரிழந்த அங்கொட லொக்காவின் சடலம் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன. இந்த விடயம் தொடர்பில் மதுரையைச் சேர்ந்த சட்டத்தரணி சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன், அமானி தான்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பில் கோயம்புத்தூர் CBCID பொலிஸார் தொடர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சட்டத்தரணி சிவகாமி சுந்தரி தங்கியிருந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்ட மூவரும் கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் நேற்று (12) ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் மூவரையும் 10 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரையும் மூன்று நாட்கள் மாத்திரம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.