பயணிகளுக்கு கொரோனா: ஷங்காய்க்கான ஶ்ரீலங்கன் விமான சேவையை இடைநிறுத்த சீனா நடவடிக்கை

பயணிகளுக்கு கொரோனா: ஷங்காய்க்கான ஶ்ரீலங்கன் விமான சேவையை இடைநிறுத்த சீனா நடவடிக்கை

பயணிகளுக்கு கொரோனா: ஷங்காய்க்கான ஶ்ரீலங்கன் விமான சேவையை இடைநிறுத்த சீனா நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2020 | 8:02 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான சேவை உள்ளிட்ட மூன்று விமான சேவைகளின் ஷங்காய்க்கான விமானப் போக்குவரத்தை இடைநிறுத்துவதற்கு, சீனாவின் சிவில் விமான சேவை ஒழுங்குபடுத்தல் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த விமான சேவைகளூடாக சீனாவிற்கு அழைத்துச்செல்லப்பட்ட பயணிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவையின் UL 866 விமானத்தில் கடந்த 7 ஆம் திகதி பயணித்த 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சீனாவின் சிவில் விமான சேவை கட்டுப்பாட்டுச் சபையை மேற்கோள் காட்டி Xinhua செய்திச் சேவை செய்தி வௌியிட்டுள்ளது.

Etihad விமான சேவையின் EY 862 விமானத்தில் ஆகஸ்ட் மூன்றாம் திகதி பயணித்த மூன்று பேருக்கும், சைனா ஈஸ்டன் விமான சேவையில் ஆகஸ்ட் ஐந்தாம் திகதி பயணித்த பயணிகளில் ஆறு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், ஶ்ரீலங்கன் விமான சேவையின் கொழும்பு மற்றும் ஷங்காய்க்கு இடையிலான விமானப் போக்குவரத்து ஒரு மாதத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளதாக Xinhua செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஏனைய இரண்டு விமான சேவைகளின் விமானப் போக்குவரத்து ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் தற்போதைய கொள்கைக்கு அமைய, பயணிகள் விமானங்களில் சீனாவிற்குச் செல்லும் எந்தவொரு பயணிக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மூன்று வாரங்களுக்கு தொடர்ச்சியாக உறுதிப்படுத்தப்பட்டால், அந்த விமான ​சேவைக்கு ஒரு வாரத்திற்கு இரண்டு தடவைகள் சீனாவிற்கு விமான சேவையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படும்.

விமானத்தில் பயணித்தவர்களில் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், அந்த விமான சேவையின் போக்குவரத்து ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படும்.

அத்துடன், பத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றுக்கு உள்ளானால், நான்கு வாரங்களுக்கு விமானப் போக்குவரத்து நிறுத்தப்படும் என்பது சீனாவின் புதிய கொள்கையாகும்.

இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கன் விமான சேவையிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

துபாயிலிருந்து கொழும்பு ஊடாக ஷன்காய் நோக்கிப் பயணித்த UL 866 விமானத்தில் பயணித்த சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை குறிப்பிட்டது.

அவர்கள் கொழும்பிலிருந்து விமானத்தில் ஏறியவர்கள் அல்லவென ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்தது.

துபாயில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பயணிகள் சிலர் சீனாவிற்குள் பிரவேசித்தபோது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்