சுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்

சுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்

by Staff Writer 13-08-2020 | 7:46 AM
Colombo (News 1st) நாட்டில் விமான நிலையங்கள் மீள திறக்கப்பட்டதன் பின்னர், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக செயலியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகளினதும் நாட்டினதும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, ஹோட்டல்கள், தங்குமிடங்களில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக ஹோட்டல்களின் சுகாதார வழிமுறைகளைப் பரீட்சித்து சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ்வாறு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும் ஹோட்டல்களில் மாத்திரமே சுற்றுலாப் பயணிகள் தங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேற்கொள்வதற்காக விசாவுக்கு விண்ணப்பிக்கும் தினத்திலிருந்து, அவர்கள் பயணிக்கும் இடங்கள் குறித்த செயலி மூலம் பதிவு செய்யப்படவுள்ளன. நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், இரு தடவைகள் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் சுகாதார காப்புறுதி திட்டமொன்று இருத்தல் அவசியமெனவும் தம்மிகா விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.