அங்கொட லொக்காவின் பெற்றோரது மரபணு மாதிரிகளை இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை

அங்கொட லொக்காவின் பெற்றோரது மரபணு மாதிரிகளை இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2020 | 10:09 pm

Colombo (News 1st) அங்கொட லொக்கா என்றழைக்கப்படுகின்ற மத்துமகே சந்தன லசந்த பெரேராவின் பெற்றோரது மரபணு மாதிரிகளை இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி ஒருவர் இந்தத் தகவலைThe Times of India பத்திரிகைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் ஜூலை மாதம் 3 ஆம் திகதி உயிரிழந்தவர் இலங்கையின் பாதாளக் குழுத் தலைவரான அங்கொட லொக்கா என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கொட லொக்காவின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவரது பெற்றொரின் மரபணு மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

அங்கொட லொக்காவின் தந்தையான மத்துமகே லயனல் பெரேரா மற்றும் தாயாரான சந்திரிக்கா பெரேரா ஆகியோரது மரபணு மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக The Times of India பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகரில் பிரதீப் சிங் என்ற பெயரில் வசித்து வந்த அங்கொட லொக்கா இந்த வருடம் பெப்ரவரி மாதம் கோயம்புத்தூர் பாலாஜி நகருக்கு சென்றுள்ளார்.

அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் தனது முகத்தின் தோற்றத்தை மாற்றியமைத்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் இந்திய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரி ஒருவருக்கு, கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரியுடன் இருந்த ஏனைய விசாரணை அதிகாரிகளையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவேளை, அங்கொட லொக்காவின் மரண வழக்கில் கைதான மூவரையும் மூன்று நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க, கோயம்புத்தூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்