புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது 

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது 

by Staff Writer 12-08-2020 | 7:14 AM
Colombo (News 1st) புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று (12) பதவியேற்கவுள்ளனர். கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல் மடுவ ( MAGUL MADUWA) மண்டபத்தில் பதவியேற்வு வைபவம் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது. 28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு கட்டமைப்பு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அமைச்சுக்கள், அமைச்சுக்களுக்குரிய விடயங்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் ஆகியன குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை அறிக்கைக்கு இணங்க நாட்டின் எதிர்கால பயணத்தை முன்னெடுக்கக்கூடிய வகையில் அமைச்சுக்களுக்கான விடயதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய முன்னுரிமைக்கான தேசியமட்ட வழிகாட்டல் மற்றும் இணைப்பினூடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிறுவனங்களாக 7 நிறுவனங்கள் இந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம், கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம், முதலீட்டுச் சபை, கொழும்பு துறைமுக நகரத்திட்டம், டெலிகொம் நிறுவனமும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களும் அனைத்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் இதில் அடங்குகின்றன.