ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து கடுமையான ஆய்வு தேவை: உலக சுகாதார நிறுவனம்

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து கடுமையான ஆய்வு தேவை: உலக சுகாதார நிறுவனம்

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து கடுமையான ஆய்வு தேவை: உலக சுகாதார நிறுவனம்

எழுத்தாளர் Bella Dalima

12 Aug, 2020 | 3:36 pm

Colombo (News 1st) கொரோனாவிற்கு உலகின் முதல் தடுப்பூசியைக் கண்டுபிடித்து, பதிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து கடுமையான ஆய்வு தேவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவற்றில் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்ட்’ உள்ளிட்ட 6 தடுப்பூசிகள் மட்டும் பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் ரஷ்யாவில் அந்நாட்டின் இராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

இந்த தடுப்பூசி பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ள நிலையில், விரைவில் பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, அந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தயாராகி நேற்று பதிவு செய்யப்பட்டது.

இந்தத் தகவலை வெளியிட்ட ரஷ்ய அதிபர் புதின், கொரோனா தடுப்பூசிக்கு ‘Sputnik V’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் திறம்பட செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த தடுப்பூசி தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, ஆற்றல் மிக்கது என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், பாதுகாப்பு ஆய்வுகளை மிகக்கடுமையாக செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் மூன்றாம் கட்ட சோதனையை இன்று ஆரம்பிக்கவிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்