புதிய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சுகளும் விடயதானங்களும்

by Staff Writer 11-08-2020 | 8:46 PM
Colombo (News 1st) புதிய அரசாங்கத்தின் 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அமைச்சுகளுக்கான விடயதானங்களும் பொறுப்புகளும் நேற்று (10) அதிவிசேட வர்த்தமானியில் பகிரங்கப்படுத்தப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கொள்கை அறிக்கையான சுபீட்சத்தின் நோக்கிற்கமைய நாட்டின் எதிர்கால பயணத்தை முன்னெடுக்கக்கூடிய வகையில் அமைச்சுகளுக்கான விடயதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேசிய முன்னுரிமைக்கான தேசிய மட்ட வழிகாட்டல் மற்றும் இணைப்பினூடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிறுவனங்களாக 7 நிறுவனங்கள் இந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம், கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம், முதலீட்டுச் சபை, கொழும்பு துறைமுக நகரத்திட்டம், டெலிகொம் நிறுவனமும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களும் அனைத்து தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களும் இதில் அடங்குகின்றன. இதனைத் தவிர, அமைச்சுகளுக்கான விடயதானங்கள் ஒதுக்கப்பட்டபோது பின்பற்றப்பட்டுள்ள மேலும் பல சிறப்பம்சங்களை காண முடிகின்றது. தொல்பொருள் திணைக்களம் இம்முறை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸ், உள்ளக பாதுகாப்பு உள்விவகார மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்கள் ஒதுக்கப்பட்ட போது சுபீட்சத்தின் நோக்கிற்கு அமைவாக சில புதிய துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நிதி மற்றும் நிதிச்சந்தை, அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு எனும் இராஜாங்க அமைச்சும் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்பாடுகள் குறைவாக உள்ள தொழில் முயற்சிகள் மற்றும் குறைவான பயன்பாட்டையுடைய சொத்துக்களுக்கு புத்துயிர் அளிக்கும் சட்டத்தின் கீழ் திறைசேரியின் செயலாளரின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களும் அதில் அடங்குகின்றன. சமுர்த்தி, வீட்டுப் பொருளாதாரம், நுண் நிதி, சுயதொழில், தொழில் முயற்சி அபிவிருத்தி, குறைவான பயன்பாட்டையுடைய அரச வளங்களை அபிவிருத்தி செய்வதற்கான இராஜாங்க அமைச்சொன்றும் புதிதாக நிறுவப்பட்டுள்ளது. பிரதேச அபிவிருத்தி வங்கி, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், சமூக பாதுகாப்புச் சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் இந்த அமைச்சின் கீழ் இயங்கவுள்ளன. பிராந்திய ஒத்துழைப்பு விவகார இராஜாங்க அமைச்சின் கீழ் லக்ஷ்மன் கதிர்காமர் நிலையம் மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சும் உருவாக்கப்பட்டுள்ளதுடன், தேசிய கல்வி நிறுவனமும் தேசிய கல்வி ஆணைக்குழுவும் இந்த அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. பிக்குகள் பல்கலைக்கழகம், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், பிரிவெனா கல்விச் சபை என்பன அறநெறி பாடசாலைகள், பிக்கு கல்வி, பிரிவெனா மற்றும் பௌத்த பல்கலைக்கழக இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கவுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அனைத்து அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் பட்டப் பின்படிப்பு நிறுவனங்களை இம்முறை கல்வி அமைச்சு நிர்வகிக்கவுள்ளது. வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஒரே நிறுவனம் அரச மரக் கூட்டுதாபனமாகும். எனினும், வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் பள்ளம் தோண்டுதல் உள்ளிட்ட பாதுகாப்பு செயற்றிட்டங்கள், காடுகளில் மீள் நடுகை மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ் வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. நெல் மற்றும் தானியங்கள், சேதனப் பசளை, மரக்கறி, பழ வகைகள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை ஊக்குவிப்பு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சு எனும் பெயரில் புதிய அமைச்சொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிராந்திய பொருளாதார மத்திய நிலையங்கள், நெல் சந்தைப்படுத்தல் சபை, கமநல அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன. உரம் உற்பத்தி மற்றும் விநியோகம், இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி பயன்பாட்டை ஒழுங்குப்படுத்தும் இராஜாங்க அமைச்சின் கீழ் தேசிய உரச் செயலகம் உள்ளிட்ட அரச உர நிறுவனங்களும் அரச உரக் கூட்டுத்தாபனமும் அறிவிக்கப்பட்டுள்ளன. கால்நடை வளங்கள், பண்ணை அபிவிருத்தி - பால், முட்டை சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சும் இம்முறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்த அமைச்சின் கீழ் உள்ளன. மகாவலி அதிகார சபை இம்முறை மகாவலி வலயங்களிலுள்ள கால்வாய் மற்றும் குடியிருப்பு பொது அடிப்படை வசதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் வழிநடத்தப்படவுள்ளது. கிராமிய வயல்களை அண்மித்த குளங்கள், நீர்த்தேக்கங்கள், நீர்ப்பாசனத் திட்டங்களை அபிவிருத்தி செய்யும் இராஜாங்க அமைச்சின் கீழ் கமநல சேவைகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள நிறுவனங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன. காணி முகாமைத்துவ விவகாரம், அரச தொழில்முயற்சி, காணி மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு எனும் பெயரில் புதிய அமைச்சொன்று உருவாக்கப்பட்டுள்ளது. காணி உபயோகக் கொள்கை திட்டமிடல் திணைக்களம், காணி உரித்து நிர்ணய திணைக்களம் ஆகியன இந்த அமைச்சின் கீழ் இயங்கவுள்ளன. இந்த அமைச்சின் கீழ் சில விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் புதிய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் திட்டமாக அரச காணிகளில் முதலீட்டு வாய்புக்களை வழங்கி ஒரு இலட்சம் காணித் துண்டுகளை வங்கிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களை இணைத்து இளைஞர்களுக்கு வழங்கும் திட்டமொன்றும் இந்த இராஜாங்க அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு, அதனைச் சார்ந்த கைத்தொழில், உற்பத்தி, ஏற்றுமதியை வகைப்படுத்தும் இராஜாங்க அமைச்சும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. பனை அபிவிருத்தி சபை, இறப்பர் அபிவிருத்தி திணைக்களம், தெங்கு செய்கை சபை, தெங்கு அபிவிருத்தி அதிகார சபை ஆகிய நிறுவனங்கள் இந்த அமைச்சின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன. கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பயிர் அபிவிருத்தி சார்ந்த உற்பத்தி, ஏற்றுமதி ஊக்குவிப்பிற்கான இராஜாங்க அமைச்சும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கை மர முந்திரிகை கூட்டுத்தாபனம், ஹிங்குரான மற்றும் கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலைகள், இலங்கை சீனி நிறுவனம் ஆகியன இந்த அமைச்சினால் நிர்வகிக்கப்படவுள்ளன. துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சிற்கு மேலதிகமாக குதங்கள் வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சும் இம்முறை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் துறையினரின் ஒத்துழைப்பைப் பெற்று பேலியகொடை, வேயன்கொடை மற்றும் இரத்மலானை பகுதிகளில் வீதிகள், ரயில் சேவை ஆகியவற்றை தொடர்புபடுத்தி கொள்கலன் முனையங்களை அபிவிருத்தி செய்வது இந்த அமைச்சின் பொறுப்பாகும். பிராந்திய தேவைகள் மற்றும் தேசிய பொருளாதார தேவைகளுக்கு அமைய காலி, காங்கேசன்துறை, திருகோணமலை ஆகிய துறைமுகங்களையும் இந்த அமைச்சு அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. வீதி எழுச்சித் திட்டம் இம்முறை கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள், மோட்டார் வாகன உற்பத்தி இராஜாங்க அமைச்சும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அமைச்சின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபையும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணைக்குழுவும் இயங்கவுள்ளன. போக்குவரத்து அமைச்சிற்கு இம்முறை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியன மாத்திரமே உரித்தாகியுள்ளன. கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி இராஜங்க அமைச்சும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய விளையாட்டு கற்கை நிறுவனம், தேசிய விளையாட்டுச் சபை, விளையாட்டு மருத்துவ நிறுவனம் மற்றும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து ஒழிப்பு முகவர் நிறுவனம் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம், தேசிய பூங்காக்கள் திணைக்களம் ஆகியவற்றை சுற்றுலா அமைச்சு நிர்வகிக்கவுள்ளது. விமான சேவைகள், ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ் சிவில் விமான சேவைகள் அதிகார சபை, வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள், விமான சேவைகள் நிறுவனம், ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் அதன்கீழ் இயங்கும் நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பத்திக், கைத்தரி நெசவு, உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு, இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சு, தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில்சார் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவை இராஜாங்க அமைச்சு என்பன இம்முறை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட மேலும் சில புதிய இராஜாங்க அமைச்சுகளாகும்.