ஓட்டமாவடி பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தெரிவு 

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக ஏ.எம்.நௌபர் ஏகமனதாக தெரிவு

by Staff Writer 11-08-2020 | 7:07 PM
Colombo (News 1st) ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏ.எம்.நௌபர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் அமர்வு இன்று இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் 7 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நான்கு உறுப்பினர்களும் இன்றைய சபை அமர்வில் கலந்துகொண்டிருந்தனர். இதற்கு மேலதிகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் சார்பில் தலா ஒரு உறுப்பினர் இன்றைய அமர்வில் பிரசன்னமாகியிருந்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்கள் இன்றைய அமர்வில் கலந்துகொள்ளவில்லை என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட ஐ.டி.அஸ்மி ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். எனினும், இரண்டு வருடங்களின் பின்னர் வேறு ஒருவருக்கு தவிசாளர் பதவி வழங்குவதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம், சபை ஆரம்பமாகியதுடன் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. புதிய தவிசாளராக ஏ.எம்.நௌபர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.