ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ரணில் அவதானம்

by Staff Writer 11-08-2020 | 7:25 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, கட்சித் தலைமை தொடர்பில் மீண்டும் அவதானம் செலுத்தப்படுகின்றது. நேற்று (10) சிறிகொத்த தலைமையகத்தில் இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் அகில விராஜ் காரியவசம் கட்சித் தலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் புதிய தலைவர் பதவிக்கு நால்வரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன, தயா கமேகவுடன் தமது பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாக அகில விராஜ் காரியவசம் கூறினார். கட்சித் தலைமைத்துவத்தில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்க நேற்று கலந்துரையாடலில் தெரிவித்ததாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்த போதிலும், மத்திய செயற்குழு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இதற்கு மாறுபாடான கருத்தே வௌியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை நோக்கும் போது, புதிய தலைமைத்துவத்தின் அவசியம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க நேற்றைய கலந்துரையாடலில் அவதானம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் குறித்த குழுக்களுடன் கலந்துரையாடி, அடுத்த செயற்குழு கூட்டத்தில் அறிவிக்குமாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியை முழுமையாக மறுசீரமைத்து வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதற்கான திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியதாக கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.