பிரதமரின் புதிய செயலாளர் கடமைகளை ஆரம்பித்தார்

பிரதமரின் செயலாளராக காமினி செனரத் கடமைகளை ஆரம்பித்தார்

by Staff Writer 11-08-2020 | 5:07 PM
Colombo (News 1st) பிரதமரின் புதிய செயலாளராக காமினி செனரத் இன்று கடமைகளை ஆரம்பித்தார். 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் காமினி செனரத், அவரது மேலதிக செயலாளராகவும் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக சேவையாற்றிய காலப்பகுதியில் பிரதமரின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியிருந்தார். இலங்கை நிர்வாக சேவையில் உதவி பிரதேச செயலாளராக இணைந்த அவர், குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் பதவிகளையும் வகித்துள்ளார். மேலும், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் மக்கள் வங்கி ஆகிய நிறுவனங்களின் தலைவர் பதவிகளையும் வகித்துள்ளார். இதனிடையே, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை (12) பதவியேற்கவுள்ளனர். கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல் மடுவ ( MAGUL MADUWA) மண்டபத்தில் பதவியேற்வு வைபவம் நாளை காலை 8.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது. 28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு கட்டமைப்பு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நேற்று அறிவிக்கப்பட்டது. அமைச்சுகள், அமைச்சுக்களுக்குரிய விடயங்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் ஆகியன குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.