அங்கொட லொக்காவின் DNA மாதிரிகள் அனுப்பிவைப்பு

அங்கொட லொக்காவின் DNA மாதிரிகள் இந்தியாவுக்கு அனுப்பிவைப்பு 

by Staff Writer 10-08-2020 | 4:35 PM
Colombo (News 1st) 'அங்கொட லொக்கா' உயிரிழந்துள்ளாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கான மரபணு பரிசோதனைக்கு தேவையான மாதிரி மற்றும் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவித்தார். இலங்கையின் பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான 'அங்கொட லொக்கா' என சந்தேகிக்கப்படுபவரின் மரணம் உடலில் விஷம் பரவியதால் ஏற்பட்டிருக்கக் கூடும் என தமிழக பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். தமிழக பொலிஸாரை மேற்கோள்காட்டி Times of India பத்திரிகை இந்தத் தகவலை வௌியிட்டுள்ளது. கோயம்புத்தூர் சேரன் நகரிலுள்ள வாடகை வீடொன்றில் 'அங்கொட லொக்கா' எனப்படும் சந்தேக நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 3ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதுடன் கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி வைத்தியசாலையில் இரண்டு நாட்களின் பின்னர் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. உடலின் வௌிப்புறத்தில் அல்லது உடலுக்குள் பாதிப்புக்கள் ஏற்படாதபோதிலும் கையில் ஒரு விரல் மற்றும் கால் விரலின் ஒரு நகம் என்பன நீல நிறமடைந்திருந்ததாக பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைவிரல் அடையாளங்களை பயன்படுத்தி அங்கொட லொக்காவின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் Times of India பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அங்கொட லொக்கா, இல்லுவகே சந்துன் என்ற போலி பெயரில் கடவுச் சீட்டொன்றை தயாரித்து தமிழகத்திற்குள் பிரவேசித்துள்ளமை தெரியவந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜுன் 9ஆம் திகதி இலங்கைக்கு வர முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டதாகவும் Times of India செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் அங்கொட லொக்காவின் கைவிரல் அடையாளங்களை பெற்றிருந்தாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கொட லொக்கா என நம்பப்படுகின்ற நபரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பை சேர்ந்தவர் என கருதப்படுகின்ற அமானி தாஞ்சி எனப்படுகின்ற பெண், மதுரையைச் சேர்ந்த சட்டத்தரணியான சிவகாமி சுந்தரி மற்றும் அவரது நண்பரான தியாகேஷ்வரன் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை மற்றும் போலி ஆவணம் தயாரித்தமை ஆகிய 2 வழக்குகள் இவர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது.    

ஏனைய செய்திகள்